உ.பி. தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழக ஆயுதப்படையினர்: ஏழு கட்ட வாக்குப்பதிவுகளில் உதவியாக ஆயிரம் போலீஸார் குவிப்பு

உ.பி. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழக ஆயுதப் படையினர்.
உ.பி. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழக ஆயுதப் படையினர்.
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேர வைக்கு இன்று (10-ம் தேதி) முதல் துவங்கி மார்ச் 7-ம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதன் பாதுகாப்பு பணிகள், மத்திய பாதுகாப்பு படைகளில் முக்கியமான சிஆர்பிஎப்பிடம் அளிக்கப்பட்டுள்ளது.

இதில், சிஆர்பிஎப் வீரர்கள் சுமார் 80,000 பேர் பணியில் உள்ளனர். இவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு உள்ளிட்ட 14 மாநிலங்களை சேர்ந்த ஆயுதப்படையினரும் உத்தரப்பிரதேசம் வந்துள்ளனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறும்போது, ‘உத்தர பிரதேசம் போன்ற பெரிய மாநிலத்திற்கு அதிகமான பாதுகாப்பு படையினர் தேவைப்படுகின்றனர். இதற்காக ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் நக்சலைட்டுகள் மற்றும் தீவிர வாதக் கண்காணிப்பு பணிகளில் உள்ள மத்திய படையினரை முழுவதுமாக அழைக்க முடியாது. எனவே, தமிழகம் போன்ற பலமாநிலங்கள் உதவியுடன் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலைநடத்தும் வழக்கம் பல ஆண்டுகளுக்கு முன்பாகத் துவங்கி நடைபெறுகிறது’ எனத் தெரிவித்தன.

தமிழகத்தின் ஆயுதப்படையில் இருந்து தலா 100 போலீஸாருடன் பத்து படைகளாக 1000 பேர் உத்தர பிரதேசம் வந்துள்ளனர். இவர்களுக்கு தலைமை ஏற்றுவந்துள்ள திருச்சியின் ஆயுதப்படை கமாண்டரான எம்.ஆனந்தன், டெல்லி திஹார் சிறைக் காவலில் உள்ள தமிழக பாதுகாப்பு படையிலும் பணியாற்றியவர். இவருக்குஉதவியாக தமிழக ஆயுதப்படையின் ஒரு துணை கமாண்டர், 2 உதவி கமாண்டரும் வந்துள்ளனர். கவுதம்புத்நகர் மற்றும் ஹாபுரில் முகாமிட்டுள்ள தமிழக ஆயுதப்படையினர், தற்போது உத்தரபிரதேசத்தில் நிலவும் கடும் குளிருக்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு உடைகளுடனும் வந்துள்ளனர்.

டெல்லியின் அருகிலுள்ள நொய்டாவில் தமிழக போலீஸார் நடத்திய கம்பீரமான அணிவகுப்பை உத்தர பிரதேச வாசிகள் கண்டு ரசித்தனர். வட மாநிலங்களில் முக்கியமான மாநிலத்தின் பாதுகாப்புப்பணி தமக்கு முக்கிய அனுபவமாக இருக்கும் என ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறி பெருமிதம் கொண்டனர் தமிழக ஆயுதப்படையினர். தமிழக போலீஸாருக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை கவுதம்புத்நகர் மாவட்டத்தில் உதவி ஆணையராக இருக்கும் தமிழரான இளமாறன் ஐபிஎஸ் செய்துள்ளார்.

தமிழ்நாட்டுடன், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஸா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில ஆயுதப்படையினரும் வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மார்ச் 7 வரை உத்தர பிரதேச தேர்தல் பணியில் இருப்பார்கள். தமிழக போலீஸாரை இங்கு அனுப்பி வைத்த ஆயுதப்படையின் ஐஜியான எழிலரசன், உத்தர பிரதேசமாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி. தமிழரான இவர் அயல்பணியில் உத்தர பிரதேச அரசின்அனுமதிபெற்று தமிழகத்தில் தற்காலிக மாகப் பணியாற்றுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in