Published : 11 Apr 2016 09:34 AM
Last Updated : 11 Apr 2016 09:34 AM

கேரள விபத்து எதிரொலி: கோயில், விழாக்களில் பட்டாசு வெடிக்க தடை கோரி வழக்கு

கொல்லம் தீ விபத்தைத் தொடர்ந்து கோயில் திருவிழாக்கள், கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்கக் தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர இந்திய மருத்துவ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் கேரள தலைவர் ஜெயகிருஷ்ணன் கூறியதாவது: பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் திரு விழாக்களின்போது லட்சக்கணக்கானோர் கூடுகின்றனர். அப்போது பட்டாசுகள் வெடிக் கப்படுவதால் பக்தர்களின் உடல் நலனுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. ஒலி மாசால் செவித்திறன் பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் பெரும் தீ விபத்து நேரிட்டு உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

எனவே கொல்லம் தீ விபத்தை சுட்டிக் காட்டி இனிமேல் கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கக் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் என்றார்.

விமானப்படை, கடற்படை தீவிரம்

பட்டாசு விபத்தில் படுகாயமடைந்தவர் களுக்கு மருத்துவ உதவி அளிக்கும் பணி யில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மாநில அரசுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்திய விமானப்படை மற்றும் கப்பல் படை களமிறங்கியுள்ளது.

படுகாயமடைந்தவர்களை திருவனந்த புரம் மற்றும் கொல்லத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிப்பதற்காக 10க்கும் மேற்பட்ட சிறிய ரக விமானங்கள், எம்ஐ 17 மற்றும் ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு உடனடி உதவிகள் வழங்குவதற்காக சென்னையில் இருந்து 4 தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரும் கொல்லம் விரைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x