

கேரளாவில் வயது வித்தியாசம், கட்சி வேறுபாடின்றி இளம் மற்றும் மூத்த வேட்பாளர்கள் தங்கள் பிரச்சாரத்துக்கு சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் மே 16-ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் முன்னணி, இடதுசாரி முன்னணி, பாஜக கூட்டணி ஆகியவற்றுக்கு இடையில் மும்முனை போட்டி நிலவுகிறது. எல்லா கூட்டணிகளும் பிரபல நடிகர்கள், இயக்குநர்களை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளன.
காங்கிரஸ் சார்பில் முதல்வர் உம்மன் சாண்டி, மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான அச்சுதானந்தன், இளம் எம்எல்ஏ கே.எஸ். சபரிநாதன் மற்றும் பிற கட்சி வேட்பாளர்கள் சமூக வலைதளங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலில் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபடுவதை விட, வயது வித்தியாசமின்றி, கட்சி வேறுபாடின்றி அனைவரும் சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்வதையே விரும்புகின்றனர்.
குறிப்பாக முகநூல், ட்விட்டரில் தங்கள் பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். அச்சுதானந்தன் ட்விட்டரில் இணைந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்கு ஊடகங்களைப் பற்றி முகநூலில் கடும் விமர்சனம் வெளியிட்டார். பின்னர் அதை நீக்கிவிட்டார்.
இதற்கிடையில் வேட்பாளர்கள் பலர் தங்களுக்கென தனி இணையதளத்தை உருவாக்கி உள்ளனர். அதில், இதுவரை தாங்கள் செய்த சாதனைகள், வளர்ச்சிப் பணிகளை வெளியிட்டு வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் பொலிட் பிரோ உறுப்பினர் பினராயி விஜயன், பாஜக மாநில தலைவர் கும்மனம் ராஜசேகரன், மாநில காங்கிரஸ் தலைவர் சுதீரன் உட்பட பலரும் முகநூலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதல்வர் உம்மன் சாண்டியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ‘லைக்’ பதிவு செய்துள்ளனர். பத்து முறை எம்எல்ஏ.வான உம்மன் சாண்டி, தற்போது சொந்த தொகுதியான புதுபள்ளியில் 11-வது முறையாக போட்டியிடுகிறார்.