குஜராத்தில் கணவனிடம் மரியாதையை பெற போலீஸாக நடித்த இளம்பெண்

குஜராத்தில் கணவனிடம் மரியாதையை பெற போலீஸாக நடித்த இளம்பெண்
Updated on
1 min read

குஜராத் மாநிலம் ஷாபுர் ஹலிம்னி கட்க் பகுதியைச் சேர்ந்த வர் பிரியங்கா படேல் (24). இவருக்கு பேன்ட் அணிய வேண்டும், கணவன் குடும்பத்தினர் தன்னை மரியாதை யாக நடத்த வேண்டும் என ஆசை. சஞ்சய் தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார்.

தன்னை தன் கணவர் அதிகமாக கட்டுப்படுத்துவது பிரியங்காவுக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக இருவருக்கும் கருத்து மோதலும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தனக்கு ரயில்வே பாதுகாப்பு படையில் (ஆர்பிஎஃப்) பணி கிடைத்து விட்டதாக தன் கணவன் சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்துள் ளார். மத்தியப் பிரதேசத்திலுள்ள தாய் வீட்டுக்குச் சென்றபோது ஆர்பிஎஃப் சீருடையை தைத்து எடுத்துக் கொண்டு வந்திருந்தார் பிரியங்கா.

ஆர்பிஎஃப்பில் வேலை கிடைத்து விட்டதால், தன்னை தினமும் காலை கலுபுர் ரயில் நிலையத்தில் இறக்கி விட வேண்டும் என கணவனிடம் தெரிவித்துள்ளார். அவரும் தினமும் காலை அவ்வாறே செய்துள்ளார்.

மாலை பிரியங்கா தனியாக வீடு திரும்பிவிடுவார். வீட்டில் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. கடந்த புதன்கிழமை மாலை இரு பெண் காவலர்கள் பிரியங்காவைப் பார்த்துள்ளனர். இதற்கு முன் இவரைப் பார்த்ததில்லையே என, எங்கு பயிற்சி பெற்றீர்கள் என விசாரித்துள்ளனர்.

அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளிக்கவே, அவரைப் பிடித்து விசாரித்ததில் உண்மையைச் சொல்லிவிட்டார்.

இரு ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை காவல்துறையினர் பரிசோதித்தனர். அதில், பிரியங்கா வேறு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது தெரிய வந்தது.

முதுநிலை காவல் ஆய்வாளர் ஹெச்.சி. ரத்வா கூறும்போது, “கணவன்-மனைவிக்குள் உயர்வு மனப்பான்மை பிரச்சினை காரணமாக இது நடந்துள்ளது. அரசு ஊழியராக நடித்ததைத் தவிர அப்பெண் வேறு எந்த குற்றமும் செய்ய வில்லை. அவர் மீது ஐபிசி 170, 171 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பிரியங்காவின் கணவர் சஞ்சய் கூறும்போது, “கணவன் மனைவிக்குள் சிறிய பிரச்சினை. அது தீர்க்கப்பட்டுவிட்டது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in