Last Updated : 09 Feb, 2022 09:11 PM

 

Published : 09 Feb 2022 09:11 PM
Last Updated : 09 Feb 2022 09:11 PM

நீட் விவகாரத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடுகிறது திமுக, காங். - மக்களவையில் ரவீந்திரநாத் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய அரசின் பட்ஜெட்டை பாராட்டி மக்களவையில் உரையாற்றிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத், 'மருத்துவ மாணவர்களுக்கான நீட் தேர்வை காங்கிரஸ் அமலாக்கியதாகவும், இதற்கு திமுக உதவியாக இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

மக்களவையின் ஒரே ஒரு அதிமுக உறுப்பினரான ரவீந்திரநாத் மேலும் பேசியது: "கரோனா தொற்று உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டு இருந்த வேளையிலும் உலக அரங்கில் பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்லும் நாடுகளில் நமது இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இது, இந்த மத்திய அரசின் சிறப்பான நிர்வாகத் திறனை எடுத்துக்காட்டுகிறது. இதற்காக நான் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை மனதாரப் பாராட்டுகிறேன். மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறைகளின் ஒற்றுமையான முயற்சிகளினால், இந்த வளர்ச்சி முன்னெடுத்து செல்லப்பட்டுள்ளது.

அதுபோல, விவசாய நிலங்களுக்கு நீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு ரூ.44,605 கோடி செலவில் கேன் பேத்வா நதிகள் இணைப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது இந்த அரசின் சிறப்பான ஒரு முயற்சி. இந்த நிதிநிலை அறிக்கையில் மேலும் 3.8 கோடி வீடுகளுக்கு குடிநீர் ரூ.60,000 கோடி அறிவித்ததை மனதார வரவேற்கிறேன். இதன் மூலம் நமது நாட்டின் பெண்கள் குடிநீருக்காக பல தூரங்கள் தலையில் பாரத்தை தாங்கி நடக்கும் சிரமத்தை பிரதமர் குறைத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய பிரதமர், மகாகவி பாரதியார் கவிதையை குறிப்பிட்டார். அந்தக் கவிதை மூலமாக அரசியல் ஆதாயத்திற்காக நம்மை பிரித்தாளும் சக்திகளுக்கு ஒற்றுமையின் மகத்துவத்தை உணர்த்தியதற்கு பிரதமருக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

நீட் தேர்வை அன்று அமலாக்கியது காங்கிரஸ் அரசு. அதற்கு உதவியாக இருந்தது திமுக. 2004 முதல் 2014 ஆம் ஆண்டு ஆட்சி வரை 10 ஆண்டுகளாக தமிழகத்தின் காங்கிரஸ் மற்றும் திமுகவில் 10 மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள். அதே அரசின் இரண்டாவது ஆட்சியில் ஏழு மத்திய அமைச்சர்கள் இருந்தனர். சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த திமுகவின் காந்திசெல்வன் இருந்தார். அன்று இந்த நீட் தேர்வின் மீதான சட்டதிருத்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டு, இப்போது தமிழகத்தில் மாணவர்களின் உணர்வுகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்க்காக, இந்த அவையின் மூலமாக அவர்களுக்கு கடும் கண்டனத்தை இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

பிரதமர் மோடிஜி, அயராது உழைத்து வருங்கால இந்தியாவை, வருங்கால தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்கள் மீது உண்மையான அக்கறை, நாட்டின் வளர்ச்சி மீது தீராப்பற்றையும் அவர் வைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக உலக அரங்கில் நமது நாட்டை புதிய இந்தியா என்ற உன்னத இலக்கோடு, வலிமையாகவும் பாதுகாப்பான நாடாகவும் முன்னெடுத்து செல்லும் வகையில் இந்த பட்ஜெட் உரை அமைந்திருக்கிறது" என்று பாராட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x