நாளை முதல் மும்பையில் மெட்ரோ ரயில் சேவை

நாளை முதல் மும்பையில் மெட்ரோ ரயில் சேவை
Updated on
1 min read

மூன்று வருட தாமதத்திற்குப் பிறகு, மும்பை நகரில் மெட்ரோ ரயில் சேவை நாளை தொடங்குகிறது. புறநகர் ரயில் சேவையை மட்டுமே தினமும் பயன்படுத்தி வரும் லட்சக்கணக்கான மக்களுக்கு மெட்ரோ ரயில் சிறந்த மாற்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

உள்ளூர் பாஜக எம்.பி க்ரித் சோமையா, வலுக்கட்டாயமாக மெட்ரோ சேவைத் துவங்கப்படும் என எச்சரித்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியமும் இதற்கான அனுமதியை அளித்துள்ளது.

மும்பை புறநகர் ரயில் சேவையை ஒரு நாளுக்கு 7 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயன்படுத்துகின்றனர். ரயில் பயணிகள் கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும் காட்சி தினமும் காணக் கிடைக்கும் ஒன்று. இந்நிலையில் மெட்ரோ ரயில், பயணிகளுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும்.

முதல் கட்டமாக வெர்சோவா - அந்தேரி - காட்கோபார் பகுதிகளுக்கு இடையே இந்த ரயில் சேவை இயங்கவுள்ளது என்றும், 4 நிமிடத்திற்கு ஒரு முறை ஒரு ரயில் என தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மும்பை மெட்ரோ ஒன் தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அபய் மிஷ்ரா தெரிவித்தார்.

ஒரு நாளைக்கு 200 - 250 முறை ரயில் இயங்கும் என்றும், இதில் 11 லட்சம் பேர் பயணப்படுவார்கள் என்றும் ஒரு பெட்டியில் 372 பயணிகள் வீதம், ஒரு ரயில் 1500 பயணிகளைத் தாங்கிச் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிப்ரவரி 1-ஆம் தேதி, மும்பையில் முதல் மோனோ ரயில் சேவை துவங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மகாராஷ்டிர அரசு ரூ. 9 முதல் ரூ. 13 வரை கட்டணம் இருக்கும் என கூறியிருந்தது. ஆனால் கடந்த எட்டு வருடங்களாக, மூன்று கட்டமாக நடக்கும் மெட்ரோ ரயில் கட்டுமானத்தின் செலவுகள் அதிகமானதால் மெட்ரோ ஒன் நிறுவனம் கட்டண உயர்வு கோரியிருந்தது. இதனையடுத்து குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 10, அதிகபட்சமாக ரூ. 40 (ஒரு வழிப் பயணத்திற்கு) நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மிஷ்ரா தெரிவித்தார்.

மெட்ரோ ஒன் தனியார் நிறுவனம், ரிலையன்ஸ் உள்கட்டமைப்பு, வியோலியா போக்குவரத்து மற்றும் மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் ஆகிய அமைப்புகளின் கூட்டு நிறுவனமாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in