Published : 09 Feb 2022 07:22 PM
Last Updated : 09 Feb 2022 07:22 PM

ஹிஜாப் விவகாரம்: மாணவ சமூகத்தையே கூறுபோடும் வெறுப்பரசியல் - மக்களவையில் சு.வெங்கடேசன் ஆவேசம்

புதுடெல்லி: “ஹிஜாப் அணிவதை முன்வைத்து கர்நாடகாவில் நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தினையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது” என்று மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி ஆவேசமாக பேசினார்.

மக்களவையில் இன்று பேசிய அவர், "ஜனவரி 15 ஆம் தேதி தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சியில் சிறார் நிகழ்சி ஒன்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சி பிரதமரின் மாண்பை குறைத்துவிட்டது என்று சொல்லி மத்திய இணை அமைச்சர் அவரே முன்வந்து புகாரினை கேட்டு வாங்கி அமைச்சகத்தின் மூலம் சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்புகிறார்.

இன்று கர்நாடகாவில் என்ன நடக்கிறது? ஹிஜாப் அணிவதை முன்வைத்து நடைபெறும் வெறுப்பரசியல் மாணவ சமூகத்தினையே கூறுபோட்டுக் கொண்டிருக்கிறது. தன் வயதையொத்த மாணவர்களோடு கலந்துரையாடி, சமூகமயமாகும் தேவையிலிருக்கும் மாணவ சமூகத்தின் முன்னுரிமையை குலைத்துப் போடுகிறார்கள். சிறார்கள் தலையில் கிரீடம் அணியவும் விடமாட்டீர்கள், மாணவிகள் ஹிஜாப் அணியவும் விடமாட்டீர்கள். பள்ளிக் குழந்தைகள் நாடகம் போடுவதும், கல்லூரி மாணவர்கள் ஆடை அணிவதும் உங்களின் உத்தரவின்படி தான் நடக்க வேண்டுமா?

தஞ்சை பள்ளி மாணவி மரணத்தில் மதமாற்ற மர்மம் இருக்கிறதா என்று துப்புதுலங்க ஓடிய குழந்தைகள் உரிமை ஆணையம், கர்நாடகத்துக்கு ஏன் செல்ல மறுக்கிறது? சிறுவர்களின் நாடகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மத்திய அரசு இப்பொழுது ஏன் பேச மறுக்கிறது.

‘துண்டு துணியைவைத்து எங்கள் கல்வி உரிமையை பறிக்காதீர்கள்” என்று முழங்கினாள் வீரப்பெண் முஸ்கான். “சக மாணவர்களுக்கு தண்டனை வேண்டாம், செய்தது தவறு என்று உணர்ந்தால் போதும்” என்று கூறியுள்ளார் முஸ்கான். அந்த வார்த்தை எந்த மதவெறியையும் மண்டியிடச்செய்யும் ஆற்றல் கொண்டது. ஏனெனில். இது ராமனின் வார்த்தை, நபிகளின் வார்த்தை, ஏசுவின் வார்த்தை, எதிரிகளை வீழ்த்த மனிதர்கள் கண்டறிந்த மகத்தான வார்த்தை. இந்த அவை முழுவதும் இந்த நேரத்தில் எதிரொலிக்க வேண்டிய வார்த்தை" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x