

புதுடெல்லி: டெல்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) துணைவேந்தராக அமர்த்தப்பட்ட சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் மீதான ட்விட்டர் சர்ச்சைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். முதல் பெண் துணைவேந்தரான அப்பேராசிரியர் தன் பெயரிலான இந்த கணக்கு தன்னுடையது அல்ல என மறுத்துள்ளார்.
முற்போக்கு மாணவர்களுக்கு பெயர் போன மத்தியப் பல்கலைகழகமான ஜேஎன்யூவிற்கு நேற்று முன்தினம் புதிய துணைவேந்தர் அமர்த்தப்பட்டார். இப்பதவிக்கு முதல் பெண் துணைவேந்தராக அமர்த்தப்பட்ட சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் ட்விட்டர் கணக்கின் கருத்துக்களால் சர்ச்சைகள் கிளம்பின.
இதில் அவர், சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறித்துவர்கள், டெல்லியின் விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டப் பலதின் மீது எதிரானக் கருத்துக்கள் பதிவாகி இருந்தன.
இதில், டெல்லியின் சிறுபான்மை மதவாதக் கல்வி நிலையங்களான செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைகழகத்திற்கும் மத்திய அரசு அளிக்கும் நிதி நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஒரு கருத்து இடம் பெற்றிருந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ஆம் ஆத்மி ஆளும் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலையும் அந்த ட்விட்டர் விட்டு வைக்கவில்லை. இதனால், அவரது துணைவேந்தர் பதவி அமர்வை விட அந்த ட்விட்டரின் கருத்துக்கள் வைரலாகின.
பேராசிரியர் சாந்திஸ்ரீ பெயரிலான ட்விட்டரை பின்தொடர்ந்த வெறும் 500 பேர் எண்ணிக்கை திடீர் எனப் பத்து மடங்குகளாக அதிகரித்தது. புதிய துணைவேந்தர் சாந்திஸ்ரீயைக் கண்டித்து ஜேஎன்யூவின் முன்னாள், இந்நாள் மாணவர்களும் சமூகவலைதளங்களில் விமர்சித்து வந்தனர்.
இச்சூழலில், நேற்று தன் துணைவேந்தர் பதவியில் அமர்ந்த பேராசிரியர் சாந்திஸ்ரீ பண்டிட், ''அந்த சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கொண்ட ட்விட்டர் கணக்கு தன்னுடையது அல்ல'' என மறுத்துள்ளார்.
இதன் மீது ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலில் பேராசிரியர் சாந்திஸ்ரீ தனது மறுப்பை தெரிவித்துள்ளார்.
தம் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வியை சென்னையில் முடித்த பேராசிரியர் சாந்திஸ்ரீ, இரண்டிலும் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார். பிறகு, சென்னையின் பிரசிடென்ஸி கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.