Published : 09 Feb 2022 08:40 AM
Last Updated : 09 Feb 2022 08:40 AM

'முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்தியத் தலைவர்கள் நிறுத்த வேண்டும்': ஹிஜாப் விவகாரத்தில் மலாலா கருத்து

முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவதை இந்தியத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும் என பெண் கல்வி செயற்பாட்டாளரான மலாலா யூசுப்சாயி தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை காவி துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக 'அல்லாஹ் அக்பர்'என முழக்கம் எழுப்பிய காட்சி உலகளவில் சமூக வலைத்தளங்களின் வாயிலாக வைரலானது.

இந்நிலையில் பாகிஸ்தானில் பெண் கல்விக்காக குரல் கொடுத்து தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு மீண்ட மலாலா யூசுப்சாயி இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார்.

அதில் அவர், "கல்லூரிகள் எங்களை கல்வியா? ஹிஜாபா? என்று தேர்வு செய்யும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது. பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி செல்ல அனுமதி மறுப்பது அச்சுறுத்தும் செயலாக உள்ளது. குறைந்த ஆடை, அதிகமான ஆடை என ஆடையின் அடிப்படையில் பெண்களை ஏதேனும் வரம்புக்குள் அடையாளப்படுத்துதல் தொடர்கிறது. பெண்களை இவ்வாறாக ஓரங்கட்டும் செயல்களை இந்தியத் தலைவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

மலாலா யூசுப்சாயி கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றார். உலகிலேயே மிகச் சிறிய வயதில் அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றவர் இவர் தான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x