

புதுடெல்லி: வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசியதாவது:
நமது தவறுகளை திருத்திக்கொண்டு, புதிய முன்னெடுப்புகளை எடுத்துச் செல்ல வேண்டும். இந்தியாவை முன்னெடுத்து செல்லவேண்டும் என்று நாம் சிந்திக்க வேண்டும். இந்தியாவை முன்னேற்றுவதில் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்றுபிரச்சினை சர்வதேச பெருந்தொற்று பிரச்சினையாகும். கடந்த 100 ஆண்டுகளில் இதுபோன்ற பிரச்சினையை யாரும் பார்த்தது கிடையாது. கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை உலகம் பாராட்டியது.
சில அரசியல் கட்சித் தலைவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக தங்களது முதிர்ச்சியின்மையை வெளிக்காட்டியுள்ளனர். இது நாட்டுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசியல் சுயநலத்துக்காக அவர்களின் விளையாட்டையும் நாம் பார்த்து வந்துள்ளோம்.
வாரிசு அரசியலைத் தாண்டி காங்கிரஸ் கட்சி எதையும் பார்த்தது இல்லை. இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட கட்சியில் ஒரு குடும்பமே முதன்மையாக இருந்தால், மிகப்பெரிய இழப்பு திறமைசாலிகளுக்குத்தான்.
இந்தியா 1947-ம் ஆண்டில் பிறந்ததாக சிலர் எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். ஆனால், ஜனநாயகத்தின் தாய் இந்தியா என்பதை மறந்து விட்டனர்.
காங்கிரஸ் இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிலர் கேட்கிறார்கள். காங்கிரஸ் கட்சி இல்லாமல் இருந்திருந்தால் நாட்டில், அவசர நிலை வந்திருக்காது. சீக்கியர்கள் படுகொலையும் நடந்திருக்காது. கலவரமும் நடந்திருக்காது. மகாத்மா காந்தியும் காங்கிரஸ் கட்சியை விரும்பவில்லை. காஷ்மீரி பண்டிட்களும் கஷ்டத்தை சந்தித்திருக்க மாட்டார்கள்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் குஜராத் முதல்வராக இருந்தபோது பெரிய நெருக்கடிகளை சந்தித்தேன். காங்கிரஸின் மனநிலை நகர்ப்புற நக்ஸலைட்டுகளைப் போல் இருக்கிறது.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 50 மாநில அரசுகளை ஆட்சியில் இருந்து நீக்கியது. ஆனால் நாங்கள் அப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் அல்ல.
தற்போது பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு நாம் இரங்கல் தெரிவித்து வருகிறோம். காங்கிரஸ் ஆட்சி கோவாவில் இருந்தபோது லதா மங்கேஷ்கரின் சகோதரர் ஹிருதயநாத் மங்கேஷ்கர் அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். அப்போது வீர சாவர்க்கரின் கவிதை வரிகளை பாடியதற்காக அவர் 8 நாட்களில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப் பட்டார்.
இந்திரா தான் இந்தியா... இந்தியாதான் இந்திரா என்று ஒரு கட்சியினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலைமாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
- பிடிஐ