Published : 09 Feb 2022 06:39 AM
Last Updated : 09 Feb 2022 06:39 AM

திருமலையில் ஏகாந்தமாக ரத சப்தமி: 7 வாகனங்களில் காட்சியளித்த மலையப்பர்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமியையொட்டி 7 வாகனங்களில் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி காட்சியளித்தார்.

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயி லில் ரத சப்தமி விழா நேற்று ஏகாந்தமாக நடைபெற்றது. இதில் 7 வாகனங்களில் உற்சவரான மலையப்பர் காட்சியளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ரத சப்தமி விழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். காலை சூரிய பிரபை வாகனம் முதற்கொண்டு இரவு சந்திரபிரபை வாகனம் வரை தொடர்ந்து ஒரேநாளில் 7 வாகனங்களில் உற்சவரான மலையப்பர் 4 மாட வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

ஆனால், இந்த ஆண்டு, கரோனா நிபந்தனைகளால், ரத சப்தமியை ஏகாந்தமாக கோயிலுக்குள் நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்தது.

அதன்படி, ஏழுமலையான் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காலை சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து, சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், ஹனுமன் வாகன சேவை நடைபெற்றது. பின்னர், மதியம் 2 மணியளவில் சக்கர ஸ்நான நிகழ்ச்சிகளும் கோயிலுக்குள்ளேயே நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து, கற்பக விருட்ச வாகனமும், சர்வபூபால வாகனம் மற்றும் நிறைவாக இரவு சந்திர பிரபை வாகன சேவையும் நடந்தது. ஏகாந்தமாக நடந்த இந்த ரத சப்தமி விழாவில், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டி, கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பங்கேற்றனர்.

இதேபோன்று, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை கோயில்களான திருச் சானூர் பத்மாவதி தாயார் கோயில், நிவாச மங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரர் கோயில், அப்பலைய்ய குண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் உட்பட தேவஸ்தானத்துக்கு சொந்தமான அனைத்து கோயில்களிலும் நேற்று ரத சப்தமி விழா ஏகாந்தமாக பக்தர்களுக்கு அனுமதியின்றி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x