Published : 09 Feb 2022 06:49 AM
Last Updated : 09 Feb 2022 06:49 AM
ஷில்லாங்: மேகாலயாவில் கடந்த 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் பெரும்பான்மை பெறத் தவறியது. இதனால் முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மா தலைமையில் கூட்டணி அரசு பதவியேற்றது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் முகுல் சங்மா உட்பட காங்கிரஸ் கட்சியின் 12 எம்எல்ஏக்கள் கடந்த நவம்பரில் அக்கட்சியை விட்டு விலகி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இதனால் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சியின் பலம் 5 ஆக சுருங்கியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எஞ்சிய 5 எம்எல்ஏக்களும் நேற்று அக்கட்சியை விட்டு விலகி, பாஜக இடம்பெற்றுள்ள ஆளும் மேகாலயா ஜனநாயக கூட்டணியில் (எம்டிஏ) கூட்டணியில் இணைந்தனர்.
இது தொடர்பாக முதல்வர் கான்ராட் சங்மாவிடம் அவர்கள் அளித்துள்ள கடிதத்தில், “காங்கிரஸ் எம்எல்ஏக்களான நாங்கள் எம்டிஏ கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளோம். மக்களின் நலன் கருதியும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு கூட்டு முயற்சியை உறுதி செய்யவும் முதல்வர் மற்றும் எம்டிஏ-வை ஆதரிக்க விரும்புகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.இக்கடிதத்தில் நகலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவர்கள் அனுப்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT