Published : 02 Apr 2016 07:52 AM
Last Updated : 02 Apr 2016 07:52 AM

நாளை மறுதினம் முதல்கட்டத் தேர்தல்: மேற்குவங்கம், அசாமில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது

மேற்குவங்கத்தில் 18 தொகுதிகளிலும் அசாமில் 65 தொகுதிகளிலும் நாளை மறுதினம் முதல்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதை யொட்டி 2 மாநிலங்களிலும் 83 பேரவைத் தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி கடந்த மார்ச் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மேற்குவங்கம், அசாமில் வரும் 4-ம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

மேற்குவங்க நிலவரம்

மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்குவங்க சட்டப் பேரவைக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. எனினும் அங்கு மொத்தம் 7 நாட்கள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி முதல் கட்டத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடக்கிறது.

வரும் 4-ம் தேதி 18 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த 18 தொகுதிகளிலும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இடதுசாரி- காங்கிரஸ் கூட்டணியில் இடதுசாரி கட்சிகள் 13 தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இவை தவிர பகுஜன் சமாஜ், இதர சிறிய கட்சிகள், சுயேச்சை என மொத்தம் 133 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அசாம் நிலவரம்

அசாம் சட்டப்பேரவையின் மொத்த பலம் 126 ஆகும். அந்த மாநிலத்தில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

வரும் 4-ம் தேதி முதல்கட்டத் தேர்தலில் 65 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஆளும் காங்கிரஸ் 65 தொகுதிகளிலும் போட்டி யிடுகிறது.

பாஜக கூட்டணியில் பாஜக, அசாம் கண பரிஷத், போடோ மக்கள் முன்னணி கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் 65 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 539 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் மேற்குவங்கத்தின் 18 தொகுதிகளிலும் அசாமின் 65 தொகுதிகளிலும் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய் கிறது.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தா வில் கடந்த வியாழக்கிழமை மேம்பாலம் இடிந்து விழுந்து 25 பேர் பலியானதால் அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மந்தமாக உள்ளது. முதல்வர் மம்தா பானர்ஜி தனது பிரச்சார பயணத்தை ரத்து செய்துவிட்டு மீட்பு பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

எனினும் இன்று கடைசி நாள் என்பதால் ஆளும் திரிணமூல், இடதுசாரிகள், பாஜக, காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர். இதேபோல அசாமில் ஆளும் காங்கிரஸ் சார்பில் முதல்வர் தருண் கோகோய் மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x