Last Updated : 08 Feb, 2022 01:19 PM

 

Published : 08 Feb 2022 01:19 PM
Last Updated : 08 Feb 2022 01:19 PM

பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சன்னியை 'டிக்' செய்ததால் காங்கிரஸ் கரைசேருவது கடினமா? - ஒரு பார்வை

புதுடெல்லி: ”பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக்கியது காங்கிரஸுக்கு இழப்பைத் தரும்” என்ற கருத்தை, பஞ்சாப் பல்கலைகழகத்தின் ஓய்வுபெற்ற சமூக அறிவியல் பேராசிரியரான மன்ஜித் சிங் முன்வைத்துள்ளார்.

இது குறித்து பேராசிரியர் மன்ஜித்சிங் கூறும்போது, "பஞ்சாபில் 32 சதவிகிதம் உள்ள பட்டியலினத்தவர்களில் 39 வகையானப் பிரிவுகள் உள்ளன. இவர்களது வாக்குகளை முழுமையாகப் பெற காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்கு, இந்த சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டாகப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சி தடையை உருவாக்கும் வாய்ப்புகள் உள்ளன. 1980-இல் கன்ஷிராமால் நிறுவப்பட்டு மாயாவதி தலைவராக இருக்கும் கட்சியும் பட்டியலின ஆதரவு பெற்றது. இதனால், பஞ்சாபில் அதிகமுள்ள 34 தனித்தொகுதிகளை பெறுவதும் காங்கிரஸுக்கு சவாலாகவே அமையும். சீக்கிய ஜாட் சமூகத்தின் ஆதிக்கத்திலுள்ள பஞ்சாப் அரசியலில் பட்டியலினத்தவர்களும் முக்கிய இடம் வகுக்கின்றனர்” என்றார்.

எதிர்கட்சியின் கருத்துகள்: காங்கிரஸில் சன்னியை முதல்வர் வேட்பாளராக்கியதன் மீது பஞ்சாபின் எதிர்கட்சிகளும் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இதில், அகாலி தளம் கட்சியின் முன்னாள் துணை முதல்வரான சுக்பீர்சிங் பாதல் கூறுகையில், "சன்னியின் தாக்கம் காங்கிரஸில் சிறிதும் இருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய எதிர்கட்சியான ஆம் ஆத்மியின் தேசிய அமைப்பாளரும் டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, "மணல் மாஃபியா புகாரை தாங்கிய சன்னியை முதல்வர் வேட்பாளராக்கியதன் மூலம், பொதுமக்களின் பிரச்சனையை நகைப்பிற்கு உள்ளாக்கி விட்டது காங்கிரஸ்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திரசிங் ஷெகாவாத் கூறும்போது, "முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதன் மூலம் காங்கிரஸின் தலைவிதியை யாராலும் தூக்கி நிறுத்த முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

முதல் வேட்பாளர் அறிவிப்பு சட்டவிரோதமானது: பஞ்சாபில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இதன் 14 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியதுடன், சில தொகுதிகளில் சுயேச்சைகளுக்கு தன் ஆதரவை அளித்து வருகிறது. இதன் மாநில செயலாளரான சுக்வீந்தர்சிங் சேகோன், சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துவது சட்டவிரோதமானது எனக் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்திய அரசியலமைப்பின் சட்டப்படி முதல்வர் தேர்விற்கான தேர்தல் நடப்பது இல்லை. இப்பிரச்சனையில், பெறுநிறுவனங்களின் ஆதரவுக் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுகின்றன. இதனால், பொதுமக்களின் பிரச்சினைகள் திசைதிருப்பி விடப்படுகின்றன. இவர்கள் மீது மத்திய தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து வழக்குகளை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x