'அப்பட்டமான பொய்': பிரதமர் உரைக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம்; ட்விட்டரில் வசைபாடும் எதிர்க்கட்சிகள்

'அப்பட்டமான பொய்': பிரதமர் உரைக்கு அரவிந்த் கேஜ்ரிவால் கண்டனம்; ட்விட்டரில் வசைபாடும் எதிர்க்கட்சிகள்
Updated on
1 min read

புதுடெல்லி: கரோனா முதல் அலையின் போது டெல்லி அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரத்தை விட்டு வெளியேறச் சொன்னது. இதன் விளைவாக, பஞ்சாப், உ.பி மற்றும் உத்தராகண்டில் கோவிட் வேகமாக பரவியது என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியிருப்பது அப்பட்டமான பொய் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர், "கோவிட்-19 முதல் அலையின்போது காங்கிரஸ் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது. கோவிட்-19 முதல் அலையின்போது, முழு உலகமும் மக்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது.

ஆனால், இந்த வரம்புகளையும் தாண்டி உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மும்பையில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல காங்கிரஸ் தூண்டியது. காங்கிரஸ்தான் மக்களை கஷ்டத்தில் தள்ளியது. அதே நேரத்தில், டெல்லி அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரத்தை விட்டு வெளியேறச் சொன்னது. இதன் விளைவாக, பஞ்சாப், உ.பி மற்றும் உத்தராகண்டில் கோவிட் வேகமாக பரவியது" என்று பிரதமர் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரதமர் மோடி கூறுவது அப்பட்டமான பொய். மக்களின் துயரத்தை வைத்து அரசியல் செய்கிறார். கரோனாவின் வேதனையை சோதனையை அனுபவித்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சற்று உணர்வுபூர்வமாக பிரதமர் செயல்படுவார் என நம்புகிறேன்" என்று எதிர்வினையாற்றியுள்ளார்.

;

மகாராஷ்டிரா வருவாய் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பாலாசாஹேப் தோரட், ஊரடங்கின்போது பிஹார், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு செல்ல விரும்பினர். கடைசி நிமிடத்தில் நாங்கள் அவர்களுக்கு டிக்கெட் பெற்றுக் கொடுத்தோம். மத்திய அரசின் பொறுப்பை நாங்கள் செயல்படுத்தினோம். ஆனால், பிரதமரின் பேச்சு துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்தார்.

மும்பை காங்கிரஸ் தலைவர் பாஜ் ஜகபத் கூறுகையில், "ராகுல் காந்தி சர்வதேச விமானங்களுக்கு முதலில் தடைவிதிக்க வேண்டும். அதன் வாயிலாகதான் வைரஸ் நாட்டினுள் பரவும் என்று யோசனை கூறினார். ஆனால் அரசு அதை செய்யவே இல்லை.
நாங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல உதவினோம். 106 ரயில்களில் 75% டிக்கெட் கட்டணச் சலுகையை அரசு அறிவித்தபோது எஞ்சிய 25% டிக்கெட் தொகையை அவர்களுக்குக் கொடுத்து நாங்கள் உதவினோம். அவர்களுக்கு உணவும், தண்ணீரும் ஏற்பாடு செய்தோம்" என்று விளக்கினார்.

அதேபோல் சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், "ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு 4 மணி நேரங்களுக்கு முன்னரே ரயில்கள் நின்றுவிட்டன. தினக்கூலிகளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிர்கதியாக நின்றனர். அவர்களுக்கு உணவும், உறைவிடமும் அளித்தோம். இது பிரதமரின் கண்களில் தவறாகத் தெரிந்தால், இந்தத் தவறை நாங்கள் 100 முறை செய்வோம். இது தவறல்ல மனிதாபிமானம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in