டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு முதல் முறை பெண் துணைவேந்தர் நியமனம்

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு முதல் முறை பெண் துணைவேந்தர் நியமனம்
Updated on
2 min read

புதுடெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்கு (ஜேஎன்யூ) முதல் முறையாக பெண் துணை வேந்தர் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். டெல்லியில் மத்திய பல்கலைக் கழகமாக அமைந்திருப்பது ஜேஎன்யூ. இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாக அறியப்படுகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் பரிந்துரையால் இந்தப் பல்கலைக் கழகத்துக்கு, டெல்லி ஐஐடி எலக்ட்ரிக் துறை பேராசிரியர் முனைவர் ஜெகதீஷ் குமார் துணை வேந்தராக நியமிக்கப்பட்டார்.

இவரது 5 ஆண்டு பதவிக் காலம் கடந்த ஆண்டு டிசம்பரில் முடிந்தது. அதன் பிறகு பொறுப்பு துணை வேந்தராக பணியை தொடர்ந்த ஜெகதீஷ், சில நாட்களுக்கு முன்னர் மத்திய பல்கலைக்கழக மானிய குழு தலைவராக நியமிகப்பட்டார். இதையடுத்து ஜேஎன்யூ புதிய துணை வேந்தராக முதல் முறையாக பெண் பேராசிரியர் முனைவர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட் (59) நியமிக்கப்பட் டுள்ளார். மத்திய கல்வித் துறைஅமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் சாந்தியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று நியமித்தார். இவர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார்.

சாந்திஸ்ரீ
சாந்திஸ்ரீ

பன்னாட்டு உறவு

சாந்திஸ்ரீ ஜேஎன்யூ.வின் பன்னாட்டு உறவுகள் துறையில் எம்.பில் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 1988-ல் கோவா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியை தொடங்கியவர், 1993-ல் புனேபல்கலைக்கழகத்துக்கு மாறினார். பல்வேறு நிர்வாகப் பொறுப்புகளிலும் இருந்த சாந்திஸ்ரீ, யுஜிசி, இந்திய சமூக அறிவியல் மற்றும் ஆய்வுக் கவுன்சிலிலும் உறுப்பினராக இருந்துள்ளார். குடியரசு தலைவரால் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் கல்வி பிரதிநிதியாக உள்ளார் பேராசிரியர் சாந்திஸ்ரீயின் வழிகாட்டுதலின் கீழ் இதுவரை 29 மாணவ, மாணவிகள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இவர், தற்போது, இந்திய அரசியல் அறிவியல் சங்கத் தலைவராகவும் உள்ளார். புனேவின் பேராசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் ராணுவ உளவு பயிற்சி பள்ளியிலும் ஆசிய பசிபிக் பிராந்தியம் மற்றும் இந்திய பாதுகாப்பு குறித்தும் சாந்திஸ்ரீ உரைகளை நிகழ்த்தி உள்ளார்.

சர்ச்சை

இந்நிலையில், சாந்திஸ்ரீ இந்துத்துவா கொள்கை கொண்ட வர் என சர்ச்சை கிளம்பியுள்ளது. இதற்கு ஆதாரங்களாக அவரது ட்விட்டர் கணக்கில் தொடர்ந்து பதிவிட்ட கருத்துகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. இதில் சாந்தி, சிறுபான்மையினரை விமர்சித்தும், விவசாய போராட்டத்துக்கு எதிராகவும் தன் கருத்துக்களை பதிவேற்றம் செய்துள்ளார். கிறித்துவர்கள், ‘அரிசி பைக்காக மதம் மாறியவர்கள்’ என்றும் முஸ்லீம்களில் சன்னி பிரிவினர் இஸ்லாத்தில் தீவிரம் காட்டுபவர்கள் என்றும் கருத்து பதிவிட்டுள்ளார். ‘காந்தியும் கோட்சேவும் ஒரே கீதையை படித்து நம்பினாலும் அதை நேரெதிர் பாடங்களாகப் புரிந்து கொண்டனர் என்பது எனது கருத்து. ஒன்றுபட்ட இந்தியாவை காண மகாத்மா காந்தியை கொல்வது அவசியம் என கோட்சே எண்ணி விட்டார். சோகம்’ என்று சாந்தி குறிப்பிட்டுள்ளார்.

பல மொழி தெரிந்தவர்

தெலுங்கு, தமிழ், மராத்தி, சம்ஸ்கிருதம், இந்தி மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழிகள் அறிந்தவராக உள்ளார். இவரது தாய், ரஷ்யாவில் பிறந்து அதன் புகழ்ப்பெற்ற கல்வி நிறுவனத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியை பயிற்றுவித்துள்ளார். தமிழரான தந்தை முனைவர் பண்டிட், சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலையில் தங்க பதக்கம் பெற்றவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in