

புதுடெல்லி: பஞ்சாபில் சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்குவதாக எழுந்த புகாரின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இது தொடர்பான விசாரணையின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு பதிவு செய்தது.
இதனிடையே, மணல் மாபியாக்களிடம் லஞ்சம் வாங்கியதாக முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் உறவினர் பூபிந்தர் சிங் (எ) ஹனி மீது புகார் எழுந்தது. இதையடுத்து, பூபிந்தர் சிங் மற்றும் சிலருக்கு சொந்தமான இடங்களில் கடந்த மாதம் 18-ம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சுமார் ரூ.10 கோடி கைப்பற்றப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பூபிந்தர் சிங்கை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 3-ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மணல் மாபியாக்களிடம் இருந்து ரூ.10 கோடி லஞ்சம் வாங்கியதை பூபிந்தர் சிங் ஒப்புக் கொண்டதாக அமலாக்கத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
- பிடிஐ