

புதுடெல்லி: பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடாளுமன்ற இரு அவைகளிலும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாரத ரத்னா விருதுபெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் நேற்று முன்தினம் மும்பையில் காலமானார். அவரது மறைவுக்கு மாநிலங்களவையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு லதா மங்கேஷ்கர் காலமானது குறித்த இரங்கல் குறிப்பை வாசித்தார். அவர் கூறுகையில், ‘‘புகழ்பெற்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்துவிட்டார். இரக்கமுள்ள மனிதரையும், இந்திய இசை மற்றும் திரைப்பட உலகில் உயர்ந்த ஆளுமையையும் நாடு இழந்துவிட்டது. அவரது மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. இசை உலகில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை லதா மங்கேஷ்கரின் மறைவு உருவாக்கியுள்ளது” என்றார். பின்னர், உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பிறகு ஒரு மணி நேரம் அவையை ஒத்திவைப்பதாக வெங்கய்ய நாயுடு அறிவித்தார்.
இதேபோல மக்களவையிலும் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மக்களவை நேற்று மாலை 4 மணிக்கு கூடியபோது லதா மங்கேஷ்கர் மறைவு குறித்து பேசிய சபாநாயகர் ஓம்பிர்லா இரங்கல் குறிப்பை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் பெருமைமிகு அடையாளமாக லதா மங்கேஷ்கர் விளங்கினார். தனது இனிய குரல் வளத்தால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்களை மகிழ வைத்தார். 1997-ம்ஆண்டு சுதந்திரதினப் பொன்விழாவின்போது, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ‘சாரே ஜஹான் சே அச்சா’ தேசபக்தி பாடலை லதா மங்கேஷ்கர் பாடினார். பாடகியாக மட்டுமின்றி, சிறந்த தேசப்பற்றாளராகவும் அவர் விளங்கினார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது இழப்பு திரைத்துறைக்கு ஈடுசெய்ய முடியாதது. அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை யாராலும் நிரப்ப முடியாது. இவ்வாறு ஓம்பிர்லா கூறினார்.
இதைத்தொடர்ந்து, லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உறுப்பினர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர், மாலை 5 மணி வரை அவை ஒத்திவைக் கப்பட்டது.
- பிடிஐ