

இராக்கில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக வளைகுடா நாடுகளுக்கான இந்தியத் தூதர்களுடன் வெளி யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இராக்கில் அரசுப் படைகளுக்கும் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. அந்த நாட்டில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் போர் முனையில் சிக்கித் தவித்து வருகின்றனர். 39 இந்தியர்கள் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக வளை குடா நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை வகித்தார்.
முதல்கட்டமாக இராக்கில் போரினால் பாதிக்கப்படாத பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி கூறியதாவது:
இந்தியர்கள் பணிபுரியும் இடங்களுக்கே தூதரக அதிகாரிகள் சென்று அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகின்றனர். அவர்களின் பயணத்துக்கு தேவையான ஆவணங்கள், இலவச விமான டிக்கெட் ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். இராக்கில் 3 இடங்களில் இந்தியத் தூதரகம் சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.