

பதான்கோட் தாக்குதலின்போது, வெடிக்கவிருந்த குண்டுகளை கண்டுபிடித்த மோப்ப நாயான ராக்கெட்டுக்கு அமைதிநேர வீரதீர சாகச (காலண்ட்ரி) விருது வழங் கப்பட உள்ளது.
கடந்த ஜனவரி 1-ம் தேதி இரவு பஞ்சாபின் பதான்கோட் விமானப் படை தளத்தில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இவர்களை எதிர் கொள்ள தேசிய பாதுகாப்பு படை யின் (என்.எஸ்.ஜி) தீவிரவாதத் தடுப்பு மற்றும் விமானக் கடத்தல் தடுப்பு பிரிவினர் களம் இறக்கப் பட்டனர். இதில் 7 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததுடன் 4 தீவிர வாதிகளும் கொல்லப்பட்டனர்.
மோதல் நடந்தபோது, விமான தளத்தின் முக்கியக் கட்டிடம் ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை மறைத்து வைத்திருந்தனர். ரிமோட் மூலம் வெடிக்கச் செய்யப்பட்ட குண்டுகளால் முழு கட்டிடமும் தீ பிடித்து எரிந்தது. தீ அடங்கிய 10 மணி நேரத்துக்கு பின் என்.எஸ்.ஜி.யின் கே-9 பிரிவை சேர்ந்த பெல்ஜீயன் மாலினாய்ஸ் வகை மோப்ப நாயான ராக்கெட் கட்டிடத்தின் உள்ளே அனுப்பப் பட்டது. புகைந்து கொண்டிருந்த பொருட்களுக்கு இடையே புகுந்த ராக்கெட் மோப்பம் பிடித்தபடி சென்று, ஒரு கைப்பையை கொண்டு வந்தது. அதில் வெடிக்கும் நிலையில் பல வெடிகுண்டுகள் இருப்பது தெரியவந்து, பின்னர் அவை செயலிழக்கச் செய்யப்பட்டன. இதனால் ராணுவ வீரர்கள் பலர் காப்பாற்றப்பட்டதுடன், அங்கு பதுங்கியிருந்த ஒரு தீவிரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் ராக்கெட், பதான்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டதன் நாயகனாகக் கருதப்படுகிறது.
பதான்கோட் சம்பவத்தின்போது, ராக்கெட்டின் வலது காலில் தீக் காயம் ஏற்பட்டது. ஒரு மாத சிகிச்சைக்கு பின் ராக்கெட் பூரண குணம் அடைந்தது. தீ மற்றும் வெடி குண்டால் சேதம் அடைந்த கட்டிடத் தில் முதன் முறையாக நுழைந்த மோப்ப நாயாகவும் ராக்கெட் கருதப்படுகிறது. எனவே, ராக்கெட் மற்றும் அவரது பயிற்சி யாளருக்கு அமைதி நேரத்துக்கான வீரதீர சாகச விருது அளிக்க வேண்டும் என ராணுவத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இந்த விருதுக்கான பரிந்துரை, வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும்போது இறந்த லெப்டினன்ட் கர்னல் ஈ.கே.நிரஞ்சனுக்கும் அளிக் கப்பட்டுள்ளது. எனினும் இதற்கான இறுதி முடிவை மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமர்த்தப்படும் உயர்நிலை மதிப்பீட்டுக் குழு எடுக்கும். பிறகு இந்த விருது வரும் குடியரசு தினத்தில் வழங்கப்படும்.
இதுபோன்ற சாகச விருதுகள் ராணுவ நாய்களுக்கு வழங்கப் பட்டுள்ளன. ஆனால் என்.எஸ்.ஜி. மோப்ப நாய்க்கு அமைதி நேர வீரதீர சாகச விருது வழங்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரம் கூறும்போது, “கடந்த ஆண்டு பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு பின் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் நகர எல்லையில் ஓர் அடுக்கு மாடி வீட்டில் வெடிகுண்டு இருப்பதை டீசல் என்ற மோப்ப நாய் கண்டு பிடித்தது. அப்போது குண்டு வெடித்ததில் அந்த நாய் இறந்தது. இதற்காக அந்நாட்டு அரசு, டீசலுக்கு உயரிய காலண்ட்ரி விருது அளித்து கவுரவித்தது. எனவே அதே வகையில் நம் நாட்டில் சாகசம் புரிந்த ராக்கெட்டுக்கும் உயரிய விருதளிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது” என்று தெரிவித்தனர்.
வழக்கமாக இந்த காலண்ட்ரி விருது, பணியின்போது தனித்து புரியும் சாகசங்களுக்காக வழங்கப் படுகிறது. இதைப் பெற்றவர்களுக்கு 10 வருடப் பணி ஓய்வுக்குப் பிறகு மாதம் ரூ. 20,000 ஓய்வூதியம் கிடைக்கும். தற்போது ராக்கெட்க்கு ரூ. 15,000 முதல் 20,000 ரூபாய் வரை பராமரிப்பு தொகை அளிக்கப் படுகிறது. இதற்கு விருது அளிக்கப் பட்டால் ஓய்வுக்கு பிறகும் ராக்கெட்டுக்கு நல்ல பராமரிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
பின்லேடனை கண்டுபிடிக்க உதவிய வகையை சேர்ந்தது
‘ராக்கெட்’ விருது பெறவிருக்கும் ராக்கெட் பெல்ஜீயன் மாலினாய்ஸ் வகையை சேர்ந்தது. இந்த மோப்ப நாய்களை அமெரிக்கா பயன்படுத்தி வருகிறது. அந்நாட்டு படையினர் பாகிஸ்தானில் ஒளிந்திருந்த பயங்கரவாதி பின்லேடனை பிடிக்க இந்த வகை நாயை பயன்படுத்தினர். இதன் பிறகு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இந்த நாய்களை பயன்படுத்தத் தொடங்கின.
பார்ப்பதற்கு ஷெப்பர்டு வகை போல் தெரியும் இந்த வகை நாய்க்கு முடி சற்று குறைவாக வளரும். பிரவுன் நிறத்தில் கருப்பு திட்டுகளுடன் காணப்படும். இந்த வகை நாய்கள் அளவு கடந்த சுறுசுறுப்பு கொண்டவை. இதனால் இவற்றை வீட்டு விலங்காக வைத்து சமாளிப்பது கடினம். புதுப்புது தொழில்நுட்பங்களை இவை எளிதில் கற்கும் திறமை படைத்தவை. திறமையான மற்றும் கடுமையாக பாடுபடக்கூடிய பயிற்சியாளர் மட்டுமே இந்த வகை நாய்க்கு பயிற்சி அளிக்க முடியும். இந்த வகை, ராஜபாளையம் போல், பிரான்ஸ் நாட்டின் மாலினாய்ஸ் என்ற இடத்தில் இருந்து உருவாகி உள்ளது.
34 கிலோ எடையுள்ள ராக்கெட்டுக்கு வயது மூன்று. இதற்கு சுமார் ஒன்றரை ஆண்டு காலம் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, வெடிகுண்டுகளை மோப்பம் பிடிப்பது, எதிரிகளை தாக்குவது மற்றும் பின் தொடர்வதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சி நிலையம் இந்தியாவில் ம.பி.யின் குவாலியருக்கு அருகில் டிக்கன்பூர் என்ற இடத்தில் மட்டுமே உள்ளது.