

புதுடெல்லி: ஒரு மாதத்துக்குப் பின்னர் இந்தியாவில் அன்றாட கரோனா பாதிப்பு 1 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இந்தியாவில் புதிதாக 83,876 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அன்றாட பாசிடிவிட்டி விகிதம் (100 பேரில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாகிறது என்ற விகிதம்) 7.25% என்றளவில் உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
* இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கரோனா சிகிச்சையில் உள்ளோர் 11,08,938 பேர்.
* அன்றாட பாசிடிவிட்டி விகிதம் 7.25% என்றளவில் உள்ளது.
* வாராந்திர பாசிடிவிட்டி விகிதம் 9.18% என்றளவில் உள்ளது.
* கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 83,876 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
* இதுவரை கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை: 4,22,72,014.
* கடந்த 24 மணி நேரத்தில் 1,99,054 பேர் காரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
* இதுவரை கரோனா பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை: 4,06,60,202.
* கடந்த 24 மணி நேரத்தில் 895 பேர் உயிரிழந்தனர்.
* கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,02,874.
* இதுவரை நாடு முழுவதும் 169.63% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அன்றாட கரோனா பாதிப்பு குறைந்துவருவதால் டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு தடுப்பூசிக்கு அனுமதி: இதற்கிடையில், கரோனா வைரஸுக்கு எதிரான ஒரே டோஸில் செலுத்திக் கொள்ளும் வகையிலான ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசரகால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. இது நாட்டில் பயன்பாட்டுக்கு வரும் 9வது தடுப்பூசியாகும். இதனால் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தேசத்தின் கூட்டுப் போராட்டம் இன்னும் வலுப்பெறும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
இந்தியாவில் இப்போது கரோனாவுக்கு எதிராக கோவாக்சின், கோவிஷீல்டு, ஃபைஸர், மாடர்னா, ஸ்புட்னிக் V, ஜைக்கோவ் டி, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட 9 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன.