Published : 07 Feb 2022 07:08 AM
Last Updated : 07 Feb 2022 07:08 AM
புதுடெல்லி: வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அனைத்து வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட உள்ளன.
பிஎஃப் திட்டத்தை பயன்படுத்தி, அதிக அளவில் வருமானம் ஈட்டுபவர்கள் அதிக தொகையை வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கி அதன் மூலம் அதிக லாபம் அடைந்துவந்தனர்.இந்தப் போக்கை தடுக்க மத்திய அரசு, ஊழியர் தரப்பிலிருந்து கட்டப்படும் பிஎஃப் ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்தைத் தாண்டினால், அதன் மூலமான வட்டிக்கு வரி விதிக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 2021-22-ம் பட்ஜெட் அறிவிப்பில் தெரிவித்தது.
இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ஊழியர் தரப்பிலிருந்து வரவாகும் பிஎஃப் கணக்குகளுக்கு வரி விதிக்கும் வகையில், அனைத்து பிஎஃப் கணக்குகளும் இரண்டு பாகங்களாக பிரிக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அது வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
அதன்படி, அனைத்து பிஎஃப் கணக்குகளும் வரி விதிப்புக்கு உட்பட்டவை (taxable account), வரி விதிப்புக்கு உட்படாதவை (non taxable account) என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட உள்ளன.
வரி விதிப்புக்கு உட்படாத பாகம், 2021 மார்ச் மாதம் வரையிலான பிஎஃப் விவரங்களைக் கொண்டிருக்கும். வரி விதிப்புக்கு உட்பட்ட பாகம், நடப்பு நிதி ஆண்டின் (2021 ஏப்ரல் - 2022 மார்ச்) பிஎஃப் விவரங்களையும் உள்ளடக்கி இருக்கும். அதன் அடிப்படையில் பிஎஃப் வட்டி மீதான வரி கணக்கிடப்படும். பிஎஃப் வரி விதிப்புக்கென்று வருமான வரி விதிகளில் 9டி என்று பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT