Published : 06 Feb 2022 07:40 PM
Last Updated : 06 Feb 2022 07:40 PM

விடைபெற்றார் லதா மங்கேஷ்கர் - அரசு மரியாதையுடன் உடல் தகனம் | பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

மும்பை: பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் உடல், முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மும்பை சிவாஜி பார்க்கில் நடந்த இறுதி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியார், முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். திரைப் பிரபலங்கள் ஷாருக்கான், ஜாவேத் அக்தார், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக, கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார். அவருக்கு வயது 92.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க சரியாக காலை 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்தி மோடி, மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள், விளையாட்டுத் துறை வீரர்கள் எனப் பலரும் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

2 நாள் துக்கம் அனுசரிப்பு: லதா மங்கேஷ்கர் மறைவை ஒட்டி இன்று முதல் இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு நாளை விடுமுறை அறிவித்துள்ளது.

லதா மங்கேஷ்கரின் இசைப்பயணம்: 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். ஐந்து குழந்தைகளில் மூத்தவரான லதா மங்கேஷ்கர் தன் ஐந்தாவது வயதிலேயே இசைப் பயிற்சியை தொடங்கி விட்டார். தன்னுடைய 13 வயதில் தந்தையை இழந்து குடும்ப பாரத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

லதா தன் தந்தையின் நெருங்கிய நண்பரான விநாயக் என்பவரது உதவியுடன் 1942ஆம் ஆண்டு மராத்தி திரைப்படமான ‘கிஸி ஹசாய்’ என்ற படத்தில் ஒரு பாடலை பாடினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பாடல் படத்தில் இடம்பெறவில்லை. ஆனால் அதே ஆண்டு வெளியான ‘பஹ்லி மங்களா கவுர்’ என்ற படத்தில் லதாவுக்கு ஒரு சிறிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தில் ஒரு பாடலை பாடும் வாய்ப்பையும் லதா பெற்றார்.

1943ஆம் ஆண்டு வெளியான ‘கஜாபாவ்’ என்ற திரைப்படத்தில் தான் முதன்முதலாக ஒரு இந்திப் பாடலை லதா பாடினார். அதன் பின்னர் பல்வேறு தடங்கல்கள், சறுக்கல்கள் என அவரது வாழ்க்கையும், இசைப்பயணமும் சென்றது. ஆனால் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் அவர் தனது திறமையை வளர்த்தெடுத்தார். இதனால் 1950களில் லதா மங்கேஷ்கரின் குரல் இல்லாத படங்களே இல்லை என்று நிலை உருவானது. ஷங்கர் ஜெய்கிசான், நௌஷாத் அலி, எஸ்.டி. பர்மன் தொடங்கி சஜ்ஜாத் ஹுசைன் வரை அந்த ஆண்டில் பிரபலமாக இருந்த அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும் லதா பாடினார்.

நேருவை கண்ணீர் சிந்த வைத்தத் தருணம்: 1963 ஜனவரி 27ல் இந்திய சீன போரின் பின்னணியில் லதா மங்கேஷ்கர் ஆயீ மேரே வாதான் கீ லோகோன் பாடலைக் கேட்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு கண் கலங்கினார். தேசபக்தியை குரலில் சிந்தவைத்த குயில் அவர்.

தமிழில் லதா மங்கேஷ்கர்: 1987-ம் ஆண்டு, இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில், பிரபு, ராதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆனந்த். இந்த திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில், கங்கை அமரன் எழுதிய " ஆராரோ ஆராரோ... நீ வேறோ நான் வேறோ" பாடலை லதா மங்கேஷ்கர் பாடியிருப்பார். அதுதான் தமிழில் அவரை நிலைநிறுத்திய பாடல். அதற்கு முன்னரும் பாடியிருந்தாலும், இந்தப் பாடல் வெற்றி பெற்றது. அதன் பின்னர் சத்யா படத்தில் இடம்பெற்ற வளையோசை கலகலவென பாடல், என் ஜீவன் பாடுது படத்தில் இடம்பெற்றிருந்த எங்கிருந்தோ என்னை அழைத்தது என்ன ஆகிய பாடல்களும் என்றும் அவரை தமிழ் நெஞ்சங்களில் நிலைத்திருக்கச் செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x