பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு: இன்று மாலை மும்பையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவு: இன்று மாலை மும்பையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு
Updated on
1 min read

மும்பை: பிரபல பாடகர் லதா மங்கேஷ்கரில் உடல் இன்று மாலை முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்கவிட்டு இரண்டு நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92. 20 நாட்களுக்கும் மேலாக கரோனா தொற்றுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு இன்று காலை அடுத்தடுத்த பல உறுப்புகளும் செயலிழக்க 8.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவு குறித்து மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே, லதா மங்கேஷ்கரின் மறைவு மிகுந்த வேதனையைத் தருகிறது. என் இதயம் நொறுங்கிவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும், முழு அரசு மரியாதையுடன் அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். லதா மங்கேஷ்கரின் இறுதிச் சடங்கு மாலை 6.30 மணியளவில் மும்பை சிவாஜி பார்க்கில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேவையை அங்கீகரிக்கும் வகையில் தேசியக் கொடிகள் இரண்டு நாட்களுக்கு அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் இரங்கல்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் குறிப்பில், "லதா ஜியின் மறைவுச் செய்தி இதயத்தை நொறுக்குகிறது. எனக்கு மட்டுமல்ல உலகளவில் வாழும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் இது துயரச் செய்தி. அவரது பாடல்களில் இந்தியாவின் அழகை, ஆன்மாவை வெளிக் கொண்டுவந்துள்ளார். பாரத ரத்னா லதாஜியின் சாதனைகளை யாரும் நிகர் செய்ய முடியாது" என்று பதிவிட்டுள்ளார்.

லதா மங்கேஷ்கர் 1942 ஆம் ஆண்டு அவருடைய 13 வயதில் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். அரை நூற்றாண்டுக்கும் மேல் அவர் ரசிகர்களை தனது குரலால் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு ஹ்ரிதயநாத் மங்கேஷ்கர் என்ற சகோதாரும், ஆஷா போன்ஸ்லே, உஷா மங்கேஷ்கர், மீனா மங்கேஷ்கர் என்ற சகோதரிகளும் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in