

கர்நாடக மாநிலம் மங்களூரு வட்டாரத்தில் இந்துத்துவ அமைப்பினரின் எதிர்ப்பால் சில கல்லூரிகளில் முஸ்லிம் மாணவ, மாணவிகள் குல்லா, ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) ஆகிவற்றை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பரில் உடுப்பி அரசு மகளிர் பி.யூ.கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தொடர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
இதைக் கண்டித்து குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ.கல்லூரிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் 3-வது நாளாக நேற்றும் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு மாணவர் களுக்கும் கல்லூரியில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இதனால் கோபமடைந்த முஸ்லிம் மாணவிகள், தேர்வுக்கு 2 மாதங்களே இருக்கும்போது, கல்லூரியில் அனுமதி மறுத்தால் தங்கள் படிப்பு பாதிக்கப்படும் என முழக்கம் எழுப்பினர். அதற்கு போட்டியாக இந்து மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பினர்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, "கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவதை காரணம் காட்டி மாணவிகளின் படிப்பை பாதிக்க செய்யக் கூடாது. இந்தியாவின் மகள்களின் எதிர்காலத்தை சூறையாடுகிறார்கள். சரஸ்வதி அனைவருக்கும் அறிவைக் கொடுக்கிறார். அவர் யாரையும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை" என விமர்சித்துள்ளார்.
இதற்கு பாஜக மாநில தலைவர் நளின் குமார் கட்டீல், “ஹிஜாப் விவகாரத்தை வைத்து மங்களூரு வட்டாரத்தை தலிபான்களின் கூடாரமாக மாற்றப் பார்க்கிறார்கள். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதை காங்கிரஸார் அரசியலாக்குவது சரியல்ல" என்றார்.