

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 1-ம் தேதி தனது பட்ஜெட் உரையில், மின்னணு சிப் பொருத்தப்பட்ட அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட இ-பாஸ்போர்ட்கள் மக்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த பாஸ்போர்ட்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் மக்களவையில் கூறும்போது, ‘‘இ பாஸ்போர்ட்களில் தரவுகள், வழக்கமான பாஸ்போர்ட்களில் உள்ளது போல் காகிதங்களில் இருப்பதுடன், சிப்புகளிலும் இருக்கும். இ-பாஸ்போர்ட் இன்னும் 6 மாதங்களில் மக்கள் பயன்பாட்டு வரும். இதற்காக 4.5 கோடி சிப்புகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. இதற்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தரவுகள் மின்னணு சிப்பில் சேமிக்கப்பட்டு, பிரத்யேக அச்சு இயந்திரம் மூலம் இந்த பாஸ்போர்ட் அச்சிடப்படும். தரவுகள் பாதுகாப்பை இ-பாஸ்போர்ட் மேம்படுத்தும்” என்றார்.
முன்னதாக வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளீதரன் கூறும்போது, “மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் குடிமக்களின் வசதிக்காக இ-பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த சிப்பில் ஏதேனும் தில்லுமுல்லு செய்தாலோ அல்லது சேதப்படுத்தியிருந்தாலோ கணினி கண்டறிந்துவிடும். இதன் மூலம் போலியாக பாஸ்போர்ட் தயாரிப்பது தடுக்கப்படும், ஐக்கிய நாடுகள் சபையின், சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பான ஐசிஏஓ விதிகளுக்கு உட்பட்டு இந்த சிப் பொருத்தப்படுகிறது. இந்த சிப் பொருத்துவதன் நோக்கம், சர்வதேச தரத்தில் பயண ஆவணங்கள் இருக்கிறது என்பதை உறுதிசெய்யத்தான்” என்றார்.