

லக்னோ: உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு வரும் 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகள் வரும் 10-ம் தேதி முதல்கட்ட தேர்தலை சந்திக்கின்றன. இந்நிலையில் 54 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை, மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நேற்று வெளியிட்டது. இதில் 7 முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கோரக்பூர் நகர்ப்புறம் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக குவாஜா சம்சுதீன் நிறுத்தப்பட்டுள்ளார். இதுபோல் குஷிநகர் மாவட்டம் பாசில் நகர் தொகுதி வேட்பாளராக சந்தோஷ் திவாரி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், சமாஜ்வாதி கட்சி வேட்பாளரும் பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகியவருமான சுவாமி பிரசாத் மவுரியாவுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ளார்.
கோரக்பூர் மாவட்டம், சில்லுபூர் தொகுதி வேட்பாளராக ராஜேந்திர சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தொகுதியின் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ வினய் ஷங்கர் திவாரி, சமாஜ்வாதி கட்சியில் இணைந்துவிட்ட நிலையில் இங்கு ராஜேந்திர சிங் நிறுத்தப்பட்டுள்ளார்.