

சட்ட நிபுணர் முனைவர் வி.வெங்கடேசன் ‘பிரன்ட்லைன்’ ஆங்கில இதழில் 27 வருடம் சட்ட செய்தியாளராக இருந்த பின் ‘லீப்லெட்’ சட்ட செய்திகள் இணையதளத்தின் ஆசிரியராக உள்ளார். நீட் பிரச்சினையில் ‘இந்து தமிழ்’ நாளிதழின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:
முந்தைய அதிமுக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இதேபோன்ற மசோதாவை திமுக அரசு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன?
நீட்டிற்கு எதிரான கருத்து தமிழக மக்களிடம் தொடர்ந்தமையால் புதிதாக வந்த திமுக அரசு மீண்டும் ஒரு நீட் விலக்கு மசோதாவை இயற்றியதில் தவறில்லை. இந்த மசோதா, குடியரசுத் தலைவருக்கு மீண்டும் அனுப்பப்பட்டால் அதை அதிமுக ஆட்சியில் செய்தது போல் நிராகரிப்பார் என நாம் உறுதியாக சொல்ல முடியாது. அவர் தனது எண்ணத்தை மாற்றி புதிய முடிவு எடுக்கவும் வாய்ப்புள்ளது. இதில், நிராகரிப்பதற்கான அல்லது திருத்தம் செய்ய வேண்டியக் கருத்துகளை குறிப்பிட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்ப வாய்ப்பு உள்ளன.
எந்த கருத்தையும் கூறாமல் நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரித்ததால் தான், புதிய மசோதாவை நிறைவேற்றி திமுக அரசு அனுப்பியதாகக் கூறப்படுகிறதே?
நிராகரிக்கும் போது சரியான காரணங்கள் அளிக்கப்பட வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பை குடியரசுத் தலைவர் நிறைவேற்ற வில்லை எனில், அதே மசோதாவை புதிதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதில் தவறில்லை.
திமுக அரசின் நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியது சரியா?
இந்திய அரசியல் சாசனத்தின்200-வது பிரிவின்படி அனுப்பியிருந்தால் சரிதான். இதன்படி இருக்கும் மூன்றில் ஒரு விதிமுறையின்படி ஒரு காரணத்துடன் ஆளுநர் திருப்பி அனுப்பிருப்பார் எனக் கருது கிறேன். இக்காரணங்களை பரிசீலனை செய்து திருத்தங்களுட னான மசோதாவை தமிழக அரசு, ஆளுநருக்கு அனுப்பலாம். அதன்பிறகும் ஒப்புதல் கிடைக்கவில்லை எனில், ஆளுநரின் நிலைப்பாட்டை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றம் செல்லலாம்.
நீட் மசோதா, திருப்பி அனுப்பியதை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் பலன் கிடைக்குமா?
இப்பிரச்சினையில் இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 201-ஐ ஆளுநர் பயன்படுத்தவில்லை. இதை அவர் பயன்படுத்தி இருந்தால், தமிழகத்திற்கு எதிராக நீட்மசோதாவை குடியரசுத் தலைவர் நிராகரிக்கும் வாய்ப்புகள் இருந்திருக்கும். எனவே, தற்போது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யத் தேவையில்லை. ஏனெனில், ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை தற்போது திரும்ப அனுப்பியது தமிழக அரசுக்கு சாதகமாகவே உள்ளது. இதற்காக ஆளுநர் அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவை பயன்படுத்தி உள்ளார். இதன்படி திரும்பி வந்த மசோதாவை திருத்தங்களுடன் தமிழக அரசு மீண்டும் அனுப்பினால் அதற்கு ஆளுநர் ஒப்புதல்அளிப்பதை தவிர வேறு வழியில்லை. இதற்கும் ஒப்புதல் தராமல் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினால் அது, அரசியல் சாசனத்தின் 200-வது பிரிவுக்கு முரணானது ஆகும்.
நீட் தேர்வில் விலக்கு கிடைக்காததற்கு மத்திய அரசு தான் முழுக் காரணம் என குற்றம் சுமத்துவதும் திமுகவின் நோக்கமாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறதே?
அரசியல் காரணங்கள் என்னவாக இருக்கும் என சட்டத்தின்படி கண்டுபிடிக்க முடியாது. ஆனால், ஆளுநர் தனது கருத்தில் தெளிவாக, அந்த மசோதா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி ஒரு சட்டம் இயற்றினால் அது நீதிமன்ற அவமதிப்பு ஆகிவிடும். இதற்கான பதிலுடன் மசோதாவை ஆளுநருக்கு தமிழக அரசு அனுப்புவது மிக அவசியம்.