

தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் தரப்பு மனுவை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வழக்கில் மூன்றாம் தரப்பாக சேர்க்க எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி உச்ச நீதிமன்றம் அன்பழகன் தரப்பு மனுவை நிராகரித்துள்ளது.
இருப்பினும், அன்பழகன் தரப்பில் ஏற்கெனவே முன்வைக்கப்பட்ட வாதங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்றும். இதுவரை தெரிவிக்காத புதிய வாதங்கள் ஏதேனும் இருந்தால் அதை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யலாம் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீதான சொத்துகுவிப்பு மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கர்நாடகா அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த க.அன்பழகன் சார்பில் வாதம் நடத்த மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு, நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவ் ராய் தலைமையிலான அமர்வு முன் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.
அப்போது திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, ஜெ. சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 3-ம் தரப்பாக தங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், "இந்த வழக்கில் தங்களை மூன்றாம் தரப்பாக சேர்க்க என்ன முகாந்திரம் இருக்கிறது?" என வினவினர்.
நீதிபதிகள் கேள்விக்கு பதிலளித்த அன்பழகன் தரப்பு வழக்கறிஞர், "கடந்த 2004-ல் எங்களது கோரிக்கையை ஏற்றே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி வழக்கு கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் வழக்கில் நாங்கள் மூன்றாம் தரப்பாக சேர்க்கப்பட்டோம். பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் நாங்கள் 3-ம் தரப்பாக ஆஜராகி எழுத்துபூர்வமாக வாதங்களை முன்வைக்கவும், வாய்மொழியாக வாதிடவும் அனுமதிக்கப்பட்டோம். பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா எங்கள் வாதங்களை ஏற்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.
அதன்பின்னர் இந்த வழக்கில் கர்நாடகா தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் செயல்பாடுகள் சரியில்லை என்றும், அவரை மாற்ற வேண்டும் என்றும் நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டோம். எங்கள் வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம் பவானி சிங்கை நீக்கியது. மேலும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவதாக உச்ச நீதிமன்றமே எங்களை பாராட்டியிருக்கிறது.
எனவே, எங்களை தற்போது நடைபெறும் சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 3-ம் தரப்பாக சேர்த்து வாதிட அனுமதிக்க வேண்டும்" என்றார்.
புதிதாக என்ன சொல்லப் போகிறீர்கள்?
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த வழக்கில் உங்கள் தரப்பு வாதங்களை பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும், கர்நாடகா உயர் நீதிமன்றத்திலும் ஏற்கெனவே தெரிவித்துவிட்டீர்கள். இப்போது நடைபெறும் இந்த வழக்கு ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் கர்நாடக அரசுக்கும் எதிரானது. இதில் கர்நாடக அரசும், சுப்பிரமணியன் சுவாமி தரப்பும் பல்வேறு வாதங்களை முன்வைத்திருக்கிறது. இந்த நிலையில், இவ்வழக்கில் நீங்கள் புதிதாக என்ன சொல்லப்போகிறீர்கள். வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டியிருப்பதால் ஏற்கெனவே கேட்ட வாதங்களையே திரும்பக் கேட்டு நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. எனவே, இந்த வழக்கில் உங்கள் தரப்பில் இதுவரை முன்வைக்காத புதிய வாதம் இருந்தால் அதனை மட்டும் எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யுங்கள்" என்றனர்.
குறிப்பு: இதில் ஆட்சேபத்துக்குரிய சில வரிகள் நீக்கப்பட்டுள்ளன. - ஆசிரியர்.