

பருத்தி விதை விலைகளை மத்திய அரசு தொடர்ந்து கட்டுப்படுத்தும் என்றும், அமெரிக்க பயோ டெக்னாலஜி நிறுவனம் மான்சாண்டோ விவசாயிகளை சுரண்ட அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ராயல்டி மதிப்பு அல்லது ட்ரெய்ட் என்று அழைக்கப்படும் தொகை மீது மத்திய அரசு கட்டுப்பாடு செலுத்தும் என்றும், இதனால் பருத்தி விதை விலை அரசின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கும் என்றும் மத்திய அரசு கடந்த டிசம்பரில் அறிவித்தது.
கடந்த மாதம் முதல் முறையாக மத்திய அரசு பி.டி.பருத்தி விதை பாக்கெட்டுக்கு ரூ.800 என்று சீரான விலையை நிர்ணையித்தது. இதில் ராயல்டி தொகை ரூ.49-ம் அடங்கும். இந்த விலை நிர்ணயம் விவசாயிகளுக்குப் பயனளிக்கக் கூடியது, ஆனால் அமெரிக்க நிறுவனமான மான்சாண்டோவுக்கு இதில் திருப்தி ஏற்படவில்லை. இதனையடுத்து மான்சாண்டோவின் இந்திய தலைமை, கடும் அதிருப்தி வெளியிட்டு இந்தியாவில் வர்த்தகம் செய்வதையே பரிசீலனை செய்ய வேண்டி வரும் என்று எச்சரித்தது.
இந்நிலையில், புதுடெல்லியில் 2 நாள் காரிப் மாநாட்டில் பேசிய வேளாண் அமைச்சர் ராதாமோகன் சிங், “அது (மான்சாண்டோ) நல்ல நிறுவனம்தான். அவர்களை மதிக்கிறோம், அதற்காக இந்திய விவசாயிகளை அவர்கள் கொள்ளை அடிக்க அனுமதிக்க முடியும் என்பது அர்த்தமல்ல. அதாவது அறிவுசார் சொத்துரிமை அவர்களிடத்தில் இருக்கிறது என்பதற்காக தங்கள் இஷ்டத்திற்கு விலைகளை நிர்ணயிக்க முடியாது. நாங்கள் தொடர்ந்து விலைகளைக் கட்டுப்படுத்தவே செய்வோம். இது விதையாக இருந்தாலும், மருந்து நிறுவனமாக இருந்தாலும் விலைக்கட்டுப்பாடு மத்திய அரசின் வசமே” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் 2016-17 பயிர் பருவத்திற்காக ராயல்டி தொகையை மத்திய அரசு சுமார் 70% குறைத்தது. இதனையடுத்து இந்திய வர்த்தகத்தை மூடுவது தவிர வேறு வழியில்லை என்று பன்னாட்டு நிறுவனமான மான்சாண்ட்டோ மிரட்டியது, மேலும் புதிய தொழில்நுட்பத்தை இந்திய விவசாயிகளுக்கு அளிப்பதிலும் சிக்கல் ஏற்படும் என்று மிரட்டியது.
மேலும் மான்சாண்டோவின் இந்திய கூட்டாளியான மேய்க்கோ மான்சாண்ட்டோ பயோடெக் நிறுவனம் அரசின் விதைக் கட்டுப்பாட்டுக் கொள்கைக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.