Published : 05 Feb 2022 10:03 PM
Last Updated : 05 Feb 2022 10:03 PM

தமிழ் மொழிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார் ராமானுஜர்.. - பிரதமர் மோடி பேச்சு

ஹைதராபாத்: வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹைதராபாத் நகருக்கு விமானம் மூலம் வந்தார். ஆனால் பிரதமரை வரவேற்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமான நிலையம் வரவில்லை. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, தெலங்கானா அமைச்சர் தலசானி ஸ்ரீனிவாஸ் யாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர். பின்னர் ஹைதராபாத்தில் உள்ள வறண்ட வெப்பமண்டலத்திற்கான சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICRISAT) 50வது ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அவருடன் ஆளுநர் தமிழிசையும் பங்கேற்றார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, "உலகம் முழுவதும் உள்ள ராமானுஜரின் சீடர்களுக்கு எனது வணக்கங்கள். ராமானுஜரின் இந்த உருவச்சிலை மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கட்டும். ராமானுஜரின் தைரியம், கருத்துக்கள் மற்றும் சித்தாத்தங்களை பின்பற்ற வேண்டும். இந்தியாவின் பெருமையை வருங்கால தலைமுறைக்கு இந்த சிலை எடுத்துகூறும்.

ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். சற்றுமுன் இங்கு நடந்த லட்சுமி நாராயண யாகத்தின் பலன் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். உலகில் மிக பழமையான நாகரீகம் கொண்ட ஒரு நாடு இந்தியா. இங்கு எந்த விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்று நமக்கு போதித்தவர்கள் ராமானுஜர் போன்ற ஆச்சார்யர்கள்தான். ராமானுஜர் மிகவும் உன்னதமான அறிவோடு விளங்கியவர். பல விஷயங்களை தனது ஒரே நூலில் எளிமையாக தெரிவித்து உள்ளார். தமிழில் பல முக்கியமான படைப்புகளை ராமானுஜர் கொடுத்துள்ளார். ராமானுஜர் ஆற்றிய பணிகளில் தமிழ் மொழிக்கு அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. சமூக சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் ராமானுஜர்" என்று பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x