

பெங்களூரு: கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் பெங்களூருவில் நேற்று கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் அதிக பட்சமாக ஜனவரியில் ஒரே நாளில் 51 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. அப்போது சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை 6 சதவீதமாக இருந்தது. இப்போது கரோனா பாதிப்பு 25 ஆயிரத்துக்கும் கீழே குறைந்து, சிகிச்சைப்பெறுவோரின் சதவீதம் 2 ஆக குறைந்துள்ளது.
இதனால் திரையரங்கம், உடற் பயிற்சி நிலையம், யோகா மையம், நீச்சல் குளம், மதுபான விடுதி, கேளிக்கை விடுதி ஆகியவற்றில் 100 % பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பார்வை யாளர்கள் 2 தவணை தடுப்பூசி, என்.95 முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைபிடிக்க வேண்டும்.
திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 300 பேர் வரை பங்கேற்கலாம். வழிபாட்டு நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற் கலாம். பேரணி, போராட்டம், ஆர்ப்பாட்டம், கண்காட்சி, தேர் பவனி ஆகியவை நடத்த அனுமதி இல்லை. இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.