

ஆந்திராவில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 2 படுக்கை அறை கொண்ட வீடு கட்டித் தரும் திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தொடங்கி வைத்தார். இதே திட்டம் தெலங்கானாவிலும் அமல்படுத் தப்பட்டு வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திரா இரண்டாக பிரிந்த பிறகு, தெலங்கானா மற்றும் புதிய ஆந்திர மாநில அரசுகள் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன.
தெலங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டால், ஆந்திராவிலும் உடனடியாக உயர்த்தப்படுகிறது. ஆந்திர அரசு விவசாயக் கடனை தள்ளுபடி செய்தால், தெலங்கானா அரசும் தள்ளுபடி செய்கிறது.
ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியில்அம்பேத்கருக்கு 125 அடி உயரத்தில் சிலை நிறுவப்படும் என அறிவித்ததும், தெலங்கானா முதல்வர் கே. சந்திர சேகர ராவ் ஹைதராபாதில் 125 அடி உயர அம்பேத்கர் சிலைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஏழைகளுக்கு 2 படுக்கை அறை வசதி கொண்ட வீடுகள் கட்டி தரப்படும் என சந்திரசேகர ராவ் அறிவித் திருந்தார். இதன்படி இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்போது ஆந்திராவிலும் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்ட சிற்பி அம்பேத்கரின் 125-வது பிறந்த நாளான நேற்று, இந்த திட்டத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.