

குடியரசு தின அணிவகுப்பு 2022-ன் சிறந்த அலங்கார ஊர்தி மற்றும் சிறந்த அணிவகுப்புக் குழுக்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முப்படைகள், மத்திய ஆயுதப் படைகள், பிற துணைப் படைகள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் அணிவகுப்புக் குழுக்கள் ஆகியவற்றுடன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், மத்திய அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகளை மதிப்பிடுவதற்கு மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. நீதிபதிகளின் மதிப்பீட்டின் அடிப்படையில், இந்திய கடற்படை அணிவகுப்புக் குழு முப்படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப் படைகள் மற்றும் பிற துணைப் படைகளில் சிறந்த அணிவகுப்புக் குழுவாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ‘சுபாஷ் @125’ என்ற கருப்பொருளின் அடிப்படையிலான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் (CPWD) அலங்கார ஊர்தி மற்றும் ‘வந்தே பாரதம்’ நடனக் குழு ஆகியவை சிறப்புப் பரிசுப் பிரிவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஜனவரி 26, 2022 அன்று நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உத்தரப்பிரதேசத்தின் அலங்கார ஊர்தி சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம்' என்ற கருப்பொருளின் அடிப்படையில் உத்தரப் பிரதேசத்தின் அலங்கார ஊர்தி அமைக்கப்பட்டிருந்தது. இதில் கர்நாடக மாநில அலங்கார ஊர்திக்கு இரண்டாவது இடமும், மேகாலய மாநில அலங்கார ஊர்திக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது.
மக்கள் விருப்பத் தேர்வு பிரிவில் மகாராஷ்டிரா மாநில அலங்கார ஊர்தி வெற்றி பெற்றது.மகாராஷ்டிராவின் அலங்கார ஊர்தி 'பல்வகைமை மற்றும் மகாராஷ்டிராவின் மாநில உயிர் சின்னங்கள்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டிருந்தது. மக்கள் விருப்ப தேர்வு என்பது இந்த முறை தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, மக்கள் வாக்களிப்பு செய்ததன் மூலம் மகாராஷ்டிரா மாநில அலங்கார ஊர்தி வெற்றிபெற்றுள்ளது. இதற்கான ஆன்லைன் வாக்கெடுப்பு ஜனவரி 25 முதல் 31 வரை நடத்தப்பட்டது. மக்கள் விருப்பத் தேர்வு பிரிவில் உத்தர பிரதேசம் இரண்டாமிடம் பிடித்தது.