

புதுடெல்லி: இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் சமூக, பொருளாதார தளங்களில் வெற்றிகண்ட 'திராவிட மாடலை' பின்பற்ற வேண்டும் என திமுக எம்.பி மக்களவையில் பேசியுள்ளார்.
குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் தருமபுரி மக்களவை தொகுதி எம்.பியான செந்தில்குமார் பேசினார். தனது உரையில், "குடியரசுத் தலைவர் உரையில் ’கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற திருக்குறள் சொல்லப்பட்டிருக்கிறது இத்திருக்குறளின் அர்த்தம் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், கற்றுக்கொண்டதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது. தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் உயரிய லட்சியங்களை கடைபிடிக்கின்றனவா, என எண்ணிப் பார்க்க வேண்டும்.
டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளபடி, எனது லட்சியம் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம். இதனை அடிப்படையாக கொண்ட சமூகம், ஜனநாயகம் என்பது வெறும் அரசாங்க வடிவம் அல்ல. அது அடிப்படையில் சக மனிதனிடம் மரியாதை மற்றும் மரியாதைக்குரிய அணுகுமுறையை உருவாக்குவதாகும். ஜிஎஸ்டி வரி வசூலில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீடுகளை மாநிலங்களுக்கு பல மாதங்களாக கொடுக்கப்படாமல் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஆண்டு உட்பட தமிழ்நாட்டிற்கு 16 ஆயிரத்து 725 கோடி ஜிஎஸ்டி நிலுவையில் உள்ளது.
அதை எப்போது வழங்க போகிறீர்கள்?. குடியரசுத் தலைவர் உரையில் கோக்ளியர் உள்ளமைப்பு அறுவை சிகிச்சை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறுவை சிகிச்சையை மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி இந்தியாவில் முதன் முதலாக தொலைநோக்கு பார்வை கொண்ட கலைஞர் கருணாநிதியால் 2010ம் ஆண்டு முதல் இலவசமாக அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சையால் , பல நபர்கள் பயன் பெற்றுள்ளனர். திமுகவின் கொள்கை சமூக பொருளாதார தளத்தில் தொலைநோக்குப் பார்வையைக் காட்டுகிறது. குடியரசு தலைவா் உரையில் தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் அவர்களைப் பற்றிய குறிப்பும் காணப்பட்டது. ஆனால் குடியரசு தின அணிவகுப்பில் எங்கள் மாநில அலங்கார ஊர்தியில் வைக்கப்பட்ட கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் நிராகரிக்கப்பட்டுள்ளனர்
இவர்களுக்கு பதிலாக அணில், மனித தலையுடன் கூடிய மாட்டின் உடல், காவி உடை அணிந்த மனிதர்கள் ஆகியவைதான் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பில் அனுமதிக்கப்பட்டன. இவை பார்போற்றும் தமிழர்களின் பெருமையை புண்படுத்தியது. தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அலங்கார ஊர்தியை மாநில அணிவகுப்பில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்திருந்தார். இது மட்டுமல்லாமல் அந்த அலங்கார ஊர்தி தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கும் அனுப்பப்பட்டது. இவற்றை மக்கள் பெருமிதத்தோடு வரவேற்றனர். ஐந்து நிமிட நிகழ்வை ஒரு மாத நிகழ்வாக நீங்கள் மாற்றியுள்ளீர்கள்.
இந்திய ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்று நீதித்துறை. ஆனால், சமீபத்திய காலங்களில் சில இடங்களில் சில நீதிபதிகள் அரசியல் சாயத்துடன் செயல்படுகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு இரண்டு நீதிபதிகள் சாதி சார்ந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஒரு குறிப்பிட்ட நீதிபதியை ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி ஜாமீன் வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவதற்கு அணுகுகிறது. நீதிபதிகள் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவார்கள். மாறாக நீதிபதிகள் இந்தி படங்கள் மற்றும் தமிழ் திரைப்படங்களில் குறிப்புகளை மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்கிவருகின்றனர். இது ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறது. சட்டக்கல்லூரி மாணவர்கள் நீதிமன்றம் மற்றும் நூலகங்களுக்கு, தீர்ப்புகளை தேடிச்சென்று சட்டம் படிக்கிறார்கள். இந்நிலையை மாற்றி, அந்த மாணவர்கள் திரையரங்குகளிலும், ஒ.டி.டி தளங்களுக்குச் சென்று சட்டம் கற்க வேண்டும் என இந்த நீதிமன்றம் விரும்புகிறதா?
தேசிய கல்விக் கொள்கையில் இந்த அரசாங்கத்தின் முக்கிய இலக்கில் ஒன்று, உயர்கல்வியில் 2035ம் ஆண்டு மொத்த பதிவு விகிதத்தை 50 சதவீதம் உயர்த்துவது. ஆனால், தமிழ்நாடு தற்போதே 50 சதவீதத்தை எட்டியுள்ளது. ஆனால் தேசிய சராசரி வெறும் 24.6 சதவீதம் தான். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், பல அமெரிக்க மாகாணங்களை விட தமிழகம் மொத்த பதிவு விகிதத்தில் முன்னேறி உள்ளது. இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் தமிழகத்தில் சமூக - பொருளாதார தளங்களில் வெற்றியைக் கண்ட திராவிட மாடலை பின்பற்றுங்கள். அதை விட்டுவிட்டு 20 வருடம் முன்னேறிச் சென்று விட்ட ஒரு மாநிலத்தின் மீது, புதிய கல்விக் கொள்கையை திணிப்பது சரியல்ல.
உங்களுக்கு வேண்டுமென்றால் இதை, பசுப்பிரதேசத்தில் செயல்படுத்திக் கொள்ளுங்கள். எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிப்படையில் இணக்கமான நபர். அவர் வார்த்தைகளை குறைத்துக்கொண்டு செயலில் அதிகம் ஈடுபடுவார். அவர் தலைமையில் அரசியல் சட்ட போராட்டம் செய்யப்பட்டது. இதில், அவர் மருத்துவம் மற்றும் பல்மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய இடஒதுக்கீட்டை பெற்றுத்தந்தார். சமூக நீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார். எங்கள் முதல்வர் தமிழகத்தை இந்தியாவில் இருக்கும் மாநிலத்தில் ஒப்பிட்டு போட்டி போடாமல் உலக நாடுகள் ஒப்பிட்டு தமிழகத்தை அனைத்து தளங்களிலும் முன்னேற்ற வேண்டும் என்று திட்டமிடுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.