

புதுடெல்லி: தூர்தர்ஷனின் குடியரசு தின ஒளிபரப்பு உலகளவில் பிரபலமானது. குடியரசு தின நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் யூடியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 2.6 கோடியாக உள்ளது.
இதுகுறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரம்மாண்டமான விழாக்களில் அனைத்துக் கோணங்களிலும் ஒளிபரப்புவதில் தூர்தர்ஷனுக்கு இணை இல்லை என்பது கடந்த காலத்தில் நன்கு நிறுவப்பட்டுள்ளது. 2022 குடியரசு தினத்தில் இந்திய விமானப்படையின் அணிவகுப்பை முழுமையான பெருமையோடு முன் எப்போதும் காண இயலாத காட்சிகளுடன் தூர்தர்ஷன் ஒளிபரப்பி தனது திறனை மீண்டும் நிறுவியுள்ளது.
தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை காண்போரின் வகைமையில் மாற்றம் இருப்பதன் அறிகுறியாக இதன் அலைவரிசைகளின் நிகழ்ச்சிகளைக் காண்போர் எண்ணிக்கை 2.3 கோடியாக இருக்கும் நிலையில், குடியரசு தின நிகழ்ச்சிகளை யூடியூபில் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 2.6 கோடியாக உள்ளது.
தூர்தர்ஷனில் காலை 9.30 மணியிலிருந்து, நண்பகல் வரை நாடு முழுவதும் உள்ள 180-க்கும் அதிகமான அலைவரிசைகளில் மொத்தம் 3.2 பில்லியன் தொலைக்காட்சி பார்வையிடும் நிமிடங்களாக காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.
இதன் மூலம் உலகளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க குடியரசு தின நிகழ்ச்சிகளை தூர்தர்ஷனில் காண்போரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சௌதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 140-க்கும் அதிகமான நாடுகளில் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி உள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.