Published : 04 Feb 2022 06:28 AM
Last Updated : 04 Feb 2022 06:28 AM

புதிய ஊதியக் கொள்கைக்கு எதிராக விஜயவாடாவில் ஆந்திர அரசு ஊழியர்கள் பிரம்மாண்ட பேரணி

புதிய ஊதிய கொள்கையை எதிர்த்து ஆந்திர அரசு ஊழியர் கூட்டமைப்பு சார்பில் நேற்று விஜயவாடாவில் பிரம்மாண்ட கண்டனப் பேரணி நடைபெற்றது. இதில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விஜயவாடா: புதிய ஊதியக் கொள்கையை எதிர்த்து ஆந்திராவில் அரசு ஊழியர்கள் நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தினர். இதில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது. ஜெகன் அரசு, பல்வேறு நலத் திட்டங்கள் மூலம் மக்களுக்கு நேரடியாக பணம் பட்டுவாடா செய்யத் தொடங்கியது. இதனால் மாநிலத்தின் நிதி நிலைமை மோசமடைந்தது.

இந்நிலையில், ஜெகன் அரசு அண்மையில் அறிவித்த புதிய ஊதியக் கொள்கைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய கொள்கையின்படி அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்வதற்கு பதிலாக குறையும் அபாயம் உள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுதொடர் பாக ஆந்திர அரசுடன் அரசு ஊழியர் சங்கங்கள் 3 முறை நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து அடுத்தகட்ட நட வடிக்கை குறித்து முடிவு செய்வதற்காக விஜயவாடாவில் நேற்று பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அரசு ஊழியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், கூட்டத்துக்கு அரசு அனுமதி தரவில்லை. அரசு ஊழியர்கள் யாரும் தேவையின்றி விடுப்பு எடுக்கக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மேலும், தடையை மீறி செல்பவர்களை கைது செய்ய போலீஸாருக்கும் உத்தரவிடப்பட்டது.

அரசின் பல்வேறு தடைகளை மீறி விஜயவாடாவில் நேற்று அரசு ஊழியர்களின் பிரம்மாண்ட பேரணி நடந்தது. இதில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணி சென்ற பிஆர்டிஎஸ் சாலை மனிதக் கடல்போல் காட்சி அளித்தது.

போராட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘எங்களின் கோரிக்கையை அரசு ஏற்காவிடில் வரும் 7-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம். போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை ஊழியர்களும் எங்களுடன் போராட்டத் தில் இணைவர்‘‘ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x