

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். அங்கு கடந்த புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) துணை அதிபரும் பிரதமரும் துபாய் ஆட்சி பொறுப்பாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தவுமை பினராஜி விஜயன் சந்தித்து கேரளாவில் முதலீடு மற்றும் கேரள மாநிலத்தவரின் நலன் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், ட்விட்டரில் ஷேக் முகமது மலையாளத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டார். அதில், ‘‘கேரள மக்கள் துபாய் மற்றும் யுஏஇ வளர்ச்சி, பொருளாதார மேம்பாட்டுக்கு கணிசமாக பங்களித்து வருகின்றனர்’’ என்று பாராட்டியிருந்தார். இந்த ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.
துணை அதிபர் ஷேக் முகமது வுக்கு அரபி மொழியில் நன்றி தெரிவித்து பினராயி விஜயன். ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘உங்கள் விருந்தோம்பல் மற்றும் வரவேற்புக்கு மிக்க நன்றி. யுஏஇ மற்றும் துபாயுடன் கேரள மாநில உறவை மேலும் பலப்படுத்த விரும்புகிறேன். அதேபோல் கேரள மாநிலத்தில் அதிக முதலீடுகளை செய்ய வேண்டும். வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான சிறந்த சூழ்நிலையை கேரள அரசு செய்து தரும்’’ என்று உறுதி அளித்துள்ளார்.-பிடிஐ