Published : 02 Jun 2014 03:13 PM
Last Updated : 02 Jun 2014 03:13 PM

உ.பி.யில் பாஜக கனவு வெற்றியும் சட்டத்தின் அச்சுறுத்தலும்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப் பிரதேசத்தில் 71 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இந்த வெற்றி சட்ட இடையூறுகளினால் பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

காரணம், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 எம்.பி.க்கள் மீது கடுமையான கிரிமினல் வழக்குகள் இருந்து வருகின்றன. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி இவர்கள் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களது எம்.பி. பதவி பறிபோகும் என்று தெரிகிறது.

கடந்த மார்ச் 10 ஆம் தேதி நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான பெஞ்ச், மக்கள் பிரதிநிதிகள் மீதான கிரிமினல் வழக்குகள் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட்டு, ஓர் ஆண்டுக்குள் தீர்ப்பு வெளியிடவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8(1), 8(2), 8(3) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரணைகள் தினசரி அடிப்படையில் நடத்தப்பட்டு வழக்குகள் ஓர் ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

முன்னணி பாஜக எம்.பி.க்கள் ஆன உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, சாக்‌ஷி மகராஜ், யோகி ஆதித்யநாத், மற்றும் சாத்வி நிரஞ்சன் பாரதி ஆகியோர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.

உமா பாரதி வெறுப்புணர்வையும் கலவரத்தைத் தூண்டும் விதமாகவும் பேசியதாக வழக்கு உள்ளது. ஜோஷி மீதும் இத்தகைய குற்றச்சாட்டுகள் உள்ளன.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைப் பெறுவார்கள். மற்றொரு முன்னணி பாஜக எம்.பி.யான சாக்‌ஷி மகரஜ் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை போன்ற வழக்குகள் உள்ளன.

ஃபைசாபாத் எம்.பி. லாலு சிங் மீது அரசுப் பணிகளைத் தடுத்தல், சாட்சிகளைக் கலைத்தல் போன்ற வழக்குகள் உள்ளன.

ஜனநாயகச் சீர்திருத்த அமைப்பு தற்போதைய எம்.பி.க்களில் 22 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளதை உறுதி செய்துள்ளது. ராம் சங்கர் கதேரியா, அஜய் குமார், பைரன் பிரசாத் மிஸ்ரா, கேஷவ் பிரசாத், கன்வர் பார்தெந்து, சஞ்சீவ் பலியான், சாத்வி நிரஞ்சன் பாரதி, குஷால் கிஷோர், பாரத் சிங், ஹரிச்சந்திர திவேதி, பாரத் சிங், கன்வர் சர்வேஷ் குமார், பாபுலா மற்றும் ராஜேந்திர அகர்வால் ஆகிய பாஜக எம்.பி.க்கள் மீதும் கிரிமினல் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதில் 15 எம்.பி.க்கள் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது நிச்சயம் பாஜக அரசுக்கு பெரிய தலைவலியைக் கொடுக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குற்றசாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியாகத் தூண்டிவிடப்பட்டவை, சட்டத்தின் முன் செல்லுபடியாகாது என்று பாஜக தலைவர்கள் மறுத்தாலும், "அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும், ஆனால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் அவர்களிடத்தில் உள்ளது" என்று எதாவாவைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக் பாண்டே கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x