

புதுடெல்லி: மத்திய ஜவுளித் துறையின் தொழில் மேம்பாட்டு நிதித் திட்டத்தில் தமிழகத்தின் மானியமாக கடந்த 2019-இல் ரூ.194.65 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு அளித்த பதிலில் மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தேஷ் தெரிவித்துள்ளார்.
மக்களவையின் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி, “தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு கடந்த 2019 முதல் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது? இந்த திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய அரசு ஏதேனும் பயனுள்ள நடவடிக்கை எடுத்துள்ளதா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஷ் எழுத்துபூர்வமாக அளித்த பதில்: தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் மாநில வாரியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை. மாவட்ட வாரியாகத் தான் ஒதுக்கப்படுகிறது. மானியக் கோரிக்கைகள் தீர்த்து வைக்கப்படுவதை விரைவுபடுத்தவும் இதற்கான நடைமுறைகளை நெறிப்படுத்தவும் தற்போதுள்ள திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டம். மாற்றி அமைக்கப்பட்டு கடந்த 2018 ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியிடப்பட்டது.
இதன்படி மானியக் கோரிக்கைகளை முன்வைக்க பிரத்யேக இணைய தளம் (ஆன்லைன் போர்டல்) உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பல நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவை, டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்துதல், சொத்துகளை ஜியோ-டேக்கிங் செய்தல் கணினியில் உருவாக்கப்பட்ட இயந்திர அடையாளக் குறியீடுகளை இயந்திரங்களில் பொறித்தல், கோரிக்கைகளை பின்தொடர்தல், மானியத்தை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துதல் போன்றன.
மேலும், பல்வேறு கொள்கை விளக்கங்களும் ஜவுளி ஆணையர் அலுவலகத்துக்கு நிதி அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர மானியக் கோரிக்கைகள் தீர்க்கப்படுவதை விரைவுபடுத்துவதற்காக சில விதிமுறைகளும் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்காக, கடந்த 2021 ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெற்ற அமைச்சகங்களுக்கு இடையிலான வழிநடத்தல் குழு கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டுள்ளத என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக மாவட்ட வாரியான நிதி விவரம்: தமிழ்நாட்டுக்கு கடந்த 2019 முதல் மாவட்ட வாரிய ஒதுக்கப்பட்ட நிதி, தனி அட்டவணையாக தரப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2018-19 முதல் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்துக்கு 521 விண்ணப்பதாரர்களுக்கு ரூ.62.22 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாமக்கல் மாவட்டத்துக்கு 84 விண்ணப்பதார்களுக்கு ரூ.35.33 கோடியும், கோவை மாவட்டத்துக்கு ரூ. 196 விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26.36 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.