

புதுடெல்லி: மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் முற்றிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சில சர்வதேச ஊடகங்களில் வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: தடுப்பூசி மோசடி என்ற பெயரில் சர்வதேச ஊடகங்கள் உள்ளிட்ட ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகி உள்ளன. மக்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் முற்றிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி குறித்த தகவல்கள் தவறானவை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஊடகச் செய்திகள், எந்தவித அடிப்படையுமின்றி தவறான தகவல்களை பரப்பும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்படுகிறது.
இந்த செய்தியின் தலைப்பே தவறானதாகும். கோவின் தளத்தில் உள்ளத்தைத்தான் சுகாதாரப் பணியாளர்கள் கையாளுகிறார்கள் என்பதை இதை எழுதியவர் அறிந்திருக்கவில்லை. தடுப்பூசி செலுத்துதல் தொடர்பான நடைமுறைகளையோ அது கோவின் தளத்தில் பதியப்படுவதையோ செய்தியை தந்தவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்தியாவின் கோவிட் தடுப்பூசி இயக்கம் உலகளவில் மிகப் பெரியதாகும். கோவின் டிஜிட்டல்தளம் வழங்கும் வலுவான தொழில்நுட்ப பின்புலத்தில் இது இயங்குகிறது. இந்த டிஜிட்டல் தளத்தில் அனைத்து கோவிட் தடுப்பூசிகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கோவின் நடைமுறை அனைத்தையும் உள்ளடக்கிய தளமாகும். நாடு முழுவதும் இணையதளம் கிடைக்கும் இடங்களில் இது பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசி குறித்து அனைத்து தகவல்களும் இதில் இருக்கும். தடுப்பூசி செலுத்தும்போது பதியப்படும் தகவல்கள் சரியானதாக இருக்கும் வகையில் இதில் சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
தடுப்பூசி முறைகேடு எதுவும் நடைபெற வாய்ப்பில்லை என்று அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும்போது அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுவதாகவும், கோவின் தளத்தில் அவை பதிவாகின்றன என்றும் அரசு தெரிவித்துள்ளது.
மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா, நாடு முழுவதும் கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது என்பது பாராட்டத்தக்க அம்சமாகும். இதுவரை 167 கோடிக்கும் அதிகமான டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள் தொகையில் 76 சதவீதத்திற்கும் அதிகமானோர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.