'கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்' - பாஜகவினருக்கு திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா சவால்

'கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்' - பாஜகவினருக்கு திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா சவால்
Updated on
1 min read

கொல்கத்தா: "கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள். நான் இன்று மாலை அவையில் பேசுகிறேன்" என்று பாஜகவினருக்கு ட்விட்டர் வாயிலாக சவால் விடுத்துள்ளார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பேச்சு ஏற்படுத்திய அதிர்வே இன்னும் அடங்காத நிலையில், பாஜகவினருக்கு சவால் விடுத்திருக்கிறார் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா.

இவர் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே தனது அனல் பறக்கும் பேச்சால் அவையை அதிர வைத்தவர். "அதிகார மமதை, வெறுப்பு, மதவெறி, பொய் ஆகியவற்றால் மறைந்திருக்கும் கோழைகள், இந்த விஷயங்களை வீரம் என்று கருதுகிறார்கள். இந்த அரசும், தனது பிரச்சாரத்தில் பொய்களை பரப்புவதன் மூலம் கோழைத்தனத்தை வீரம் என்று காட்டுவதை தங்களது மிகப்பெரிய வெற்றியாக கருதி வருகிறது" என்று பேசி பரபரப்பைக் கிளப்பினார்.

இந்நிலையில், இந்த முறையும் தனது பேச்சு குறித்த முன்னோட்டத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், "இன்று மாலை நான் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான தீர்மானத்தின் போது பேசுகிறேன். பாஜகவினரே, கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்க்கும் உங்களுடைய தாக்குதல் படையைத் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் கோமியம் குடித்துவிட்டு தயாராக இருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டிருக்கிறார். ஒவ்வொரு முறை ட்ரோல் ஆகும் போதும் அவர் அது பாஜக மந்தையின் வேலை என்று விமர்சிப்பார். இந்நிலையில், இன்றைய உரைக்கான முன்னோட்டத்தை அவர் ட்விட்டரில் தெரிவித்திருப்பதால் அவரது பேச்சுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in