

புதுடெல்லி: "எனது தந்தையும் கொல்லப்பட்டிருக்கிறார்; அந்த வலியை நான் உணர்வேன்" என ராகுலுக்கு ஆறுதல் வார்த்தை சொன்ன பாஜக எம்.பி. கமலேஷ் பஸ்வான் கவனம் ஈர்த்தார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் "எனது பாட்டியின் மீது 32 குண்டுகள் பாய்ந்தன. எனது தந்தை வெடிகுண்டு தாக்குதலில் துண்டுத் துண்டாக சிதறினார். ஆனால், இன்று உங்களின் கொள்கைகள் பாகிஸ்தானையும், சீனாவையும் ஒற்றுமையாகச் செய்துள்ளது. இது ஆபத்தானது. இது பிரச்சினையை உருவாக்கும். நாட்டுக்கு இப்போது உள்ளிருந்தும், வெளியிலிருந்தும் அச்சுறுத்தல் உள்ளது. நீங்கள் யாருடைய குரலுக்கும் செவி சாய்க்காமல் நடந்துகொள்கிறீர்கள். எனக்கு முன்னால் பேசிய பாஜக எம்.பி. கமலேஷ் பஸ்வான் தவறான கட்சியில் இருக்கிறார். அவர் என்னிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார்" என்றார்.
அப்போது அவையில் சலசலப்பு எழ, கமலேஷ் பாஸ்வான் பேச அனுமதி கோரினார். ராகுல் காந்தி அதற்கு "நான் ஜனநாயகவாதி. கமலேஷ் பேச அனுமதிப்பேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய கமலேஷ் பாஸ்வான் "நான் சரியான இடத்தில்தான் இருக்கிறேன். எனது கட்சி என்னை இங்கு நிற்கவைத்துள்ளது. இதைவிட என்ன வேண்டும். என் தந்தையும் கொல்லப்பட்டிருக்கிறார். அதனால் எனக்கும் அந்த வேதனை தெரியும்" என்று கூறி அமர்ந்தார்.
கமலேஷ் பாஸ்வானின் தந்தை ஓம் பிரகாஷ் பாஸ்வான் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர். 1996-ல் பொதுக்கூட்டத்தில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில் எதிரெதிர் கட்சிக்காரர்கள் ஆறுதல் வார்த்தைகளைத் தெரிவித்துக் கொண்ட நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.