

திருவனந்தபுரம்: மலையாள திரை உலகில் சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு (ஜிஎஸ்டி) ரூ.20 கோடி அளவுக்கு நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.
திரைப்படத் தயாரிப்பாளர்கள் அளித்த வருமான அறிக்கைக்கும் நடிகர்கள் அளித்த அறிக்கைக்கும் இடையே உள்ள முரண்பாட்டை ஜிஎஸ்டி புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய வரி ஏய்ப்பு நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகர்கள் மட்டும் ரூ.8 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு நடிகர் மட்டும் ரூ.4 கோடி அளவுக்கு வரி ஏய்ப்புசெய்துள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் ரூ.12.5 கோடி அளவுக்குவரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு திரைப்பட விநியோகஸ்தர் மட்டும் அதிகபட்சமாக ரூ.4 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திரைப்படத் துறையினரின் வருமானம், தொழில்நுட்ப கலைஞர்களின் வருமானம் உள்ளிட்டவை ஜிஎஸ்டி வரம்புக்குள் வருகிறது. இதன்படி நடிகர்கள் திரைப்படங்கள், விளம்பர படங்கள், மேடை நிகழ்ச்சிகளில் நடிப்பதற்கு பெறப்படும் தொகை சேவையாகக் கருதப்பட்டு அதற்கு 18% சேவை வரி விதிக்கப்படுகிறது.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் விநியோகஸ்தர்கள் மற்றும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஆண்டு வருமான விவரம் தாக்கல் செய்வதில் இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்துள்ளவர்கள் அத்தொகையை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் அத்தொகையை செலுத்தத் தவறும்பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய வரித் தொகையில் 100% தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். அத்துடன் சட்ட ரீதியான வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.