

புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப் பட்டு முடிந்ததும் கட்சி பாகுபாடு இன்றி எதிர்க்கட்சி எம்.பி.க்களின் இருக்கைக்கு பிரதமர் மோடி சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். பொதுவாக பட்ஜெட் உரை முடிந்த உடன் அவை ஒத்திவைக்கப்படும். அதேபோல் அவை ஒத்திவைக்கப்பட்டது. கூட்டம் நிறைவடைந்ததும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அவையை விட்டு வெளியேறும் பிரதமர் மோடி, இந்த முறை வெளியேறவில்லை.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டதும், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இருக்கைக்கு அருகில் சென்ற மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியினர் அமர்ந்திருக்கும் இடத்தை நோக்கி பிரதமர் மோடி நடந்து சென்றார். மோடி வருவதை பார்த்ததும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் எம்.பி.க்கள் இருக்கையை விட்டு வெளியேறி அவையின் மையப் பகுதிக்கு வந்தனர்.
அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் சுதிப் பந்தோபாத்யாய், சவுகதா ராய் ஆகியோரிடம் சென்று, பிரதமர் மோடி நலம் விசாரித்தார். அப்போது ராய் கைகூப்பி பிரதமரை வரவேற்றார். அப்போது பிரதமர் அவரது தோளில் தட்டிக் கொடுத்து வாழ்த்தினார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, சுரேஷ் கொடிக்குனில் நோக்கி பிரதமர் மோடி நடந்து சென்றார். அப்போது வழியில் திமுக எம்.பி. டிஆர் பாலுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் தேசிய மாநாடு கட்சித்தலைவர் ஃபரூக் அப்துல்லாவை பார்த்து, அவரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், திமுகவின் எம்.பி. ஆ.ராசாவுடன்கைகுலுக்கி சிறிது நேரம் உரையாடினார். பின்னர் சவுத்ரியை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரதமர் மோடியின் இந்த செயல் எம்.பி.க்களை வியப்பில் ஆழ்த்தியது.
- பிடிஐ