Published : 03 Feb 2022 07:27 AM
Last Updated : 03 Feb 2022 07:27 AM
கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ளது கோடஞ்சேரி. இந்நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம், வைக்கோல் லாரி ஒன்று மின்கம்பி உரசியதில் தீப்பற்றியது. இதையடுத்து அதன் டிரைவர் பயத்தில் குதித்து விட்டார்.
ஆனால் அங்கிருந்த ஷாஜி வர்கீஸ் (45) என்பவர், உடனே அந்த லாரியில் ஏறி, அதனை அருகில் உள்ளகாலி மைதானத்துக்கு கொண்டு சென்றார். மேலும் லாரியை மைதானத்தில் ஜிக்ஜாக் முறையில் ஓட்டி, எரியும்வைக்கோல் கட்டுகளை ஆங்காங்கே மைதானத்தில் விழச் செய்தார். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் அங்குள்ள மக்கள் லாரி மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
தீப்பற்றி எரியும் லாரியை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இருந்து ஷாஜி அகற்றியதுடன் லாரியையும் அவர் சேதமின்றி காப்பாற்றினார். இது தொடர்பான பரபரப்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உரிய நேரத்தில் திறமை யுடன் செயல்பட்டு மிகப் பெரிய விபத்தை தவிர்த்த ஷாஜி வர்கீஸை பலரும் பாராட்டி வருகின்றனர்.
முக்கம் தீயணைப்பு நிலைய அதிகாரி பியூஸ் அகஸ்டின் கூறும்போது, “சம்பவ இடத்திலிருந்த 20 கி.மீ. தொலைவில் தீயணைப்பு நிலையம் உள்ளது. தீப்பற்றிய லாரியை அங்கிருந்து அகற்றி இருக்கா விட்டால் வெடித்து சிதறிமிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்” என்றார்.
ஷாஜி வர்கீஸ் கூறும்போது, “நான்25 ஆண்டுகளாக கனரக வாகன ஓட்டுநராக இருக்கிறேன். எனது கிராமத்திலும் வெளிநாட்டிலும் இதுபோன்ற ஆபத்தான சூழ்நிலைகளை கையாள்வதில் எனக்கு ஏற்பட்ட முந்தைய அனுபவமே இந்த சவாலை எதிர்கொள்ள உதவியதாக கருதுகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT