

பெங்களூரு: பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டிருந்தபோது முறைகேடாக சிறப்பு சலுகைகளை பெற்றதாக சசிகலா, இளவரசி மற்றும் சிறை அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், கடந்த 2017 பிப்ரவரி 15 முதல் 2021 ஜனவரி 27-ம் தேதி வரை 4 ஆண்டுகள் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்த தண்டனை காலத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் முறைகேடாக சிறப்பு சலுகைகள் பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகளை அளிப்பதற்காக சிறையின் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றம்சாட்டினார்.
சசிகலா சிறையில் சீருடை அணியாமல் வெளியே கடைக்கு சென்று திரும்பும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விசாரித்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, 245 பக்க அறிக்கையை அளித் தது. அதில், சிறையில் சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித் தது உண்மை என தெரிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, சிறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், சசிகலா உள்ளிட்டோர் மீது கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் 2019-ம் ஆண்டில் முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோதும், அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படாமல் இருந்தது.
இதனிடையே, சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா, கடந்த 2021-ம் ஆண்டு ஜூலையில், இவ்வழக்கை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசின் உள்துறை முதன்மைச் செயலருக்கு கடந்த டிசம்பரில் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக ஊழல் தடுப்புப் பிரிவின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மன்மோகன் கூறியதாவது:
பரப்பன அக்ரஹார சிறையின் தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா உள்ளிட்ட 4 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக உள்துறைச் செயலர் கடந்த டிசம்பர் 30-ம் தேதி அனுமதி அளித்தார். இதையடுத்து, கிருஷ்ண குமார், அனிதா மற்றும் சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த ஜனவரி 7-ம் தேதி விரிவான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அதில் முதல் குற்றவாளியாக கிருஷ்ணகுமாரும், 2-வது குற்றவாளியாக அனிதாவும், 3-வது குற்றவாளியாக சிறை ஆய்வாளர் பி.சுரேஷாவும், 4-வது குற்றவாளியாக சிறை துணை ஆய்வாளர் கஜராஜாவும் சேர்க்கப்பட்டுள்ள னர். கைதிகளாக இருந்த சசிகலா 5-வது குற்றவாளியாகவும், இளவரசி 6-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த 6 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 465, 468, 471, 120பி,109 மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (இ), 13(2) ஆகிய 7 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கின் விசாரணை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு ஐபிஎஸ் அதிகாரி ரூபா வரவேற்பு தெரி வித்துள்ளார்.