

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். கொல்கத்தாவில் அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர், நடந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசியதாவது:
வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும். இதற்காக மாநிலக் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாநிலக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். நமது குறிக்கோள் பாஜகவைத் தோற்கடிப்பதுதான். மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியை தோற்கடிக்க முடிந்த நம்மால், மத்தியில் பாஜகவையும் தோற்கடிக்க முடியும்.
பாஜகவை எதிர்ப்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை. தனது ஆணவம் காரணமாக காங்கிரஸ் பின் வரிசைக்குப் போய்விட்டது. மேகாலயா, சண்டிகரில் பாஜக வெற்றிபெற காங்கிரஸ் உதவியது. தேவைப்பட்டால் பாஜகவை எதிர்த்து தனியே போராடுவோம். மத்திய பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு எதுவும் இல்லை. மக்களை பாஜக ஏமாற்றுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.