

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவாக வங்கமொழி நடிகர், நடிகைகள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு போட்டியாக பாஜகவும் நடிகர், நடிகைகளை களமிறக்கியுள்ளது.
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி-காங்கிரஸ் கூட்டணி, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
ஆளும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் நடிகர்கள் தீபக் அதிகாரி, சிரன்ஜித், பிரத்யா பாசு, சோஹம் சக்கரவார்த்தி, பின்னணி பாடகர் இந்திரநில் சென், நடிகைகள் சதப்தி ராய், மூன் மூன் சென், சந்தியா ராய், நயினா பண்டோபாத்யா, தேபஸ்ரீ ராய், போனி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் களத்தில் உள்ளது.
அவர்களில் தற்போதைய திரிணமூல் எம்.எல்.ஏ.க்கள் தேபஸ்ரீ ராய், நயினா பண்டோபாத்யா ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர். மேலும் கால்பந்து வீரர் பாய்சங் பூட்டியா, கிரிக்கெட் வீரர் லஷ்மி ரத்தன் சுக்லா உள்ளிட்டோரும் திரிணமூல் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.
இதற்குப் போட்டியாக பாஜகவும் திரையுலக, சின்னத் திரை நடிகர், நடிகைகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளது. வங்கமொழி நடிகைகள் ரூபா கங்குலி, லோக்கட் சட்டர்ஜி, சின்னத்திரை நடிகர்கள் கவுசிக் சக்கரவர்த்தி, சுமன் பானர்ஜி ஆகியோர் பாஜக வேட்பாளர் களாக போட்டியிடுகின்றனர்.
ஒரு காலத்தில் நடிகர், நடிகைகளைப் பார்க்க திரையரங்குகளுக்கு ரசிகர்கள் சென்ற காலம் மாறி தற்போது திரையுலக நட்சத்திரங்கள் மக்களைத் தேடி வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.