

கர்நாடகாவில் தலித் இளைஞரைக் காதலித்த கல்லூரி மாணவியை அவரது தந்தையும், தாய் மாமனும் சேர்ந்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி ஆணவக் கொலையில் ஈடுபட்ட தந்தையையும், தாய் மாமனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் திம்மன ஒசூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் பெவூரா கவுடா (44). அப்பகுதியில் பெரும் நிலவுடைமையாளரான இவரது மகள் மோனிகா (19) அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பியூசி 2-ம் ஆண்டு (12-ம் வகுப்பு) படித்தார்.
இந்நிலையில் கடந்த மார்ச் 31-ம் தேதி கல்லூரிக்கு சென்ற மோனிகா வீடு திரும்பவில்லை. எனவே அவரது குடும்பத்தார் போலீஸில் மோனிகா காணாமல் போய்விட்டதாக புகார் அளித்தனர். தீவிர தேடுதலுக்கு பிறகு கடந்த 2-ம் தேதி போலீஸார் உதவியுடன், மோனிகாவை மீட்டனர்.
இந்நிலையில் அன்றிரவு 8 மணியளவில் மோனிகா மர்மமான முறையில் இறந்தார். அவரது குடும்பத்தார் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்காமல் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தீயிட்டு கொளுத்தினர். இந்த சம்பவம் திம்மன ஒசூர் கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீஸார் மோனிகாவின் தந்தை மோகன் பெவூரா கவுடாவிடம் விசாரித்த போது, ''மோனிகா பியூசி 2-ம் ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என பயந்து, வீட்டின் அருகிலுள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உள்ளூர் கோயில் திருவிழா தொடங்க இருப்பதால், உடலை உடனடியாக எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர். அதனால் மோனிகாவின் உடலை எங்களது தோட்டத்திலே தகனம் செய்துவிட்டோம்'' என கூறியுள்ளார்.
இந்த நிலையில் மோனிகா தலித் இளைஞரை காதலித்ததால், குடும்பத்தினரால் அடித்து சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸார் முறையாக விசாரணை நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய புகார் வந்தது.
தற்கொலை நாடகமாடிய குடும்பத்தார்
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மண்டியா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதீர் குமார் மோனிகாவின் தந்தை, தாய் மற்றும் உறவினர்களிடன் தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தன்று மோனிகா குடும்பத்தாரின் தொலைபேசி அழைப்புகள் குறித்தும், நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்ந்தனர். அப்போது மோனிகாவின் குடும்பத்தார் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியுள்ளனர்.
எனவே மோனிகாவின் தந்தை மோகன் பெவூரா கவுடாவிடம் தீவிரமாக விசாரித்த போது, ''மோனிகா தலித் இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும், அவர் பிடிவாதமாக இருந்தார். ஒரு கட்டத்தில் அந்த தலித் இளைஞருடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார். எங்களின் குடும்ப மரியாதையைக் காப்பாற்றி கொள்வதற்காக அவரை கண்டுபிடித்து, அன்றிரவே அடித்து கொலை செய்தோம்.
போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக மோனிகாவின் உடலை வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தொங்கவிட்டோம். எங்களது தற்கொலை நாடகத்தை உறவினர்கள் நம்பினர். இந்த கொலையில் மோனிகாவின் தாய் மாமன்கள் சுரேஷ் (35) ராமகிருஷ்ணா (31) ஆகிய இருவரும் உதவி செய்தார்கள். தடயங்களை அழிக்கும் வகையில் அதிகாலையிலே மோனிகாவின் உடலை எரித்துவிட்டோம்'' என தெரிவித்துள்ளார்.
சாதி ஆணவப் படுகொலை
சாதி ஆணவத்தால் மகளைக் கொன்ற மோனிகாவின் தந்தை மோகன் பெவூரா கவுடா மற்றும் தாய் மாமன் சுரேஷ் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மோனிகாவின் தாய் மற்றும் மற்றொரு தாய்மாமன் ராமகிருஷ்ணா ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். கைதாகியுள்ள மோகன் பெவூரா கவுடா, சுரேஷ் ஆகிய இருவரும் நேற்று மண்டியா மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் மோனிகாவின் வீட்டில் இருந்து அவரது செல்போன், லேப்டாப் மற்றும் டைரி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது. எரிக்கப்பட்ட இடத்தில் இருந்து சாம்பலும், எலும்பு துண்டுகளும் எடுக்கப்பட்டு தடயவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சாதி ஆணவ படுகொலையைக் கண்டித்து மண்டியா, பெங்களூரு ஆகிய இடங்களில் பல்வேறு மனித உரிமை அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.